பல்லடம் பழைய புறவழிச்சாலை திட்டம் கட்கரியிடம் தொழில் துறையினர் கோரிக்கை
பல்லடம்:திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம், புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அளவீடு பணிகள் நடந்து வந்த நிலையில் தொழில் துறையினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; பழைய புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஆணைய கோட்ட பொறியாளர், திருப்பூர் கலெக்டர் மற்றும் பல்லடம் எம்.எல்.ஏ.,வை சந்தித்து, இதுதொடர்பாக கோரிக்கை மனு அளித்துள்ளனர். சமீபத்தில், பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையையும் சந்தித்து மனு அளித்தனர். இதுதொடர்பாக விளக்கமாக கேட்டறிந்த அண்ணாமலை, மத்திய அமைச்சரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தார். அதன்படி, நேற்று முன்தினம், அண்ணாமலை தலைமையில், டில்லி சென்ற தொழில் துறையினர், மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து முறையிட்டனர். அப்போது, மத்திய இணை அமைச்சர் முருகனும் உடன் இருந்தார். பல்லடம் நகர பகுதியை ஒட்டி அமைய உள்ள புதிய புறவழிச்சாலை திட்டத்தால், அதிகப்படியான தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால், இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே திட்டமிடப்பட்ட, பழைய புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. பொதுமக்கள் பாதிக்காத வகையில், மறு ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.