மேலும் செய்திகள்
இயற்கை காய்கறி சந்தை உருவாக்க எதிர்பார்ப்பு
27-Apr-2025
உடுமலை : பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதாக தெரிவிக்கும் தமிழக அரசு, இயற்கை வேளாண்மைக்கு தேவையான, இடுபொருட்களை வட்டார விரிவாக்க மையங்கள் வாயிலாக வினியோகிக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், உணவு பொருட்கள் உற்பத்திக்காக, விவசாய சாகுபடியில், பல்வேறு ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.குறிப்பாக, காய்கறி உற்பத்திக்கு, அதிகளவு ரசாயனங்கள் பயன்படுத்துவதால், உடல் நலனுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால், பாரம்பரிய இயற்கை வேளாண்மை முறைகளுக்கு, தற்போது மக்களிடையே வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்கேற்ப அரசும், அங்கக வேளாண்மையை பின்பற்றும் விவசாயிகளை ஊக்குவிக்க, விருது வழங்கி வருகிறது.எனவே, பெரும்பாலான விவசாயிகள், தேங்காய் மற்றும் காய்கறிகள், தானியங்கள் உட்பட உற்பத்திக்கான சாகுபடிகளில், ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளை விவசாயிகள் தவிர்க்க துவங்கியுள்ளனர்.மாறாக, மூலிகை பூச்சி விரட்டி உட்பட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.இவ்வாறு, இயற்கை வேளாண்மையில் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு சந்தைகளில் நல்ல வரவேற்பும் உள்ளது.ஆனால், இத்தகைய இயற்கை வேளாண் சாகுபடிக்கான இடுபொருட்கள் தேவையான போது கிடைப்பதில்லை. விலையும் அதிகளவு உள்ளது. அனைத்து விவசாயிகளும் தேவையான இடுபொருட்களை உற்பத்தி செய்வதில் சிக்கல் உள்ளது.இதனால், இயற்கை முறைக்கு மாற விரும்புபவர்களும் மீண்டும், ரசாயன உரம் மற்றும் மருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகிறது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெள்ளை ஈ தாக்குதலால், தென்னை சாகுபடியில், கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இத்தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்க்க வேண்டும் என தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டுதல் வழங்கி வருகின்றனர்.ஆனால், நோய்க்கட்டுப்பாட்டுக்கு தேவையான இயற்கை வேளாண் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.இதே போல், காய்கறி சாகுபடியிலும், இயற்கை வேளாண் முறைக்கு தேவையான இடுபொருட்கள் தரமாகவும், குறைந்த விலைக்கும் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, நஞ்சில்லாத உணவு உற்பத்திக்கு, பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கருத்தரங்கு மட்டும் நடத்துவதை தவிர்த்து, இயற்கை வேளாண்மைக்கு, அரசு உதவியும் செய்ய வேண்டும். தனியிடம் ஒதுக்கணும்
விவசாயிகள் கூறியதாவது: இயற்கை வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. இதனால், அலைக்கழிக்கப்படும் விவசாயிகள் மாற்றத்துக்கு தயங்குகின்றனர்.எனவே, வேளாண்துறை சார்பில், வட்டார வேளாண், தோட்டக்கலை அலுவலகங்களில், இயற்கை வேளாண்மைக்கான இடுபொருட்கள், உயிர் உரங்கள் ஆகியவற்றை ஒரே மையத்தில், மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும்.இதனால், அரசுக்கு, வருவாய் கிடைப்பதுடன், இயற்கை வேளாண்மை சாகுபடி பரப்பும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.அதே போல், இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு, உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் தனியிடம் ஒதுக்க வேண்டும். இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
27-Apr-2025