காப்பீடு அட்டைக்கு கட்டணம்; பா.ஜ. தொண்டர்கள் முற்றுகை
பல்லடம்; பல்லடத்தில், முகாம் அமைத்து, மருத்துவ காப்பீடு அட்டைக்கு கட்டணம் வசூலித்து வருவதாக கூறி, நகர பா.ஜ.,வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லடம் நகர பா.ஜ., தலைவர் பன்னீர் செல்வகுமார் கூறியதாவது: பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி, பல்லடம் நகரப் பகுதி முழுவதும், முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. அதனால், பல்லடம் நகராட்சியின் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் சென்று பார்த்தபோது, 100 ரூபாய் கட்டணம் வசூலித்தது தெரிந்தது. யாருடைய அனுமதியின் பேரில் இதுபோன்ற கட்டண வசூல் நடந்து வருகிறது. அதிகாரிகள் யாரும் இதனை கண்டு கொள்ளாதது ஏன்? இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, பா.ஜ.வினர், தலைமை ஆசிரியர் பரமசிவத்திடம் இதுகுறித்து கேட்டதற்கு, ''மத்திய மாநில அரசின் மருத்துவ திட்டம் என்பதாலும், அடையாள அட்டையை காட்டி அனுமதி கேட்டதன் பேரிலும், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் அனுமதியுடன், முகாம் நடத்த அனுமதிக்கப்பட்டது,'' என்றார். இதனை தொடர்ந்து, பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, முகாம் நடத்தியவர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.