உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காய்கறி பயிர்களுக்கு காப்பீடு செய்யுங்க : தோட்டக்கலைத்துறை அழைப்பு

காய்கறி பயிர்களுக்கு காப்பீடு செய்யுங்க : தோட்டக்கலைத்துறை அழைப்பு

உடுமலை: குடிமங்கலம் வட்டார விவசாயிகள், தக்காளி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு செய்து கொள்ள தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், தக்காளி, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, பீட்ரூட், கத்தரி உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், காய்கறி பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், குடிமங்கலம் வட்டாரத்தில் தக்காளி, சின்னவெங்காயம், கொத்தமல்லி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், உடனடியாக பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் செல்வகுமார் கூறியதாவது: பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், நடப்பு பருவத்திற்கு தக்காளி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி பயிர்களுக்கு காப்பீடு செய்து, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு பெற முடியும். வட கிழக்கு பருவ மழையால், இப்பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால், நிவாரணம் பெற இயலும். எனவே, விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கிளைகள், மற்றும் பொது இ-சேவை மையங்கள் வாயிலாக பயிர் காப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு ஹெக்டேர் தக்காளி பயிருக்கு. ரூ.3,909, ஒரு ஹெக்டேர் சின்ன வெங்காய பயிருக்கு ரூ.1,602 மற்றும் ஒரு ஹெக்டேர் கொத்தமல்லி பயிருக்கு, ரூ.1,569, பிரீமியம் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சின்னவெங்காயம், தக்காளி பயிருக்கு வரும் 2026 ஜனவரி 31க்குள்ளும், மற்றும் கொத்தமல்லி பயிருக்கு, 2026 ஜன, 2ம் தேதிக்குள் பிரிமியத்தொகை செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு, பெதப்பம்பட்டி உள்வட்டத்தை சேர்ந்த விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ராஜசேகரன் 86755 56865 என்ற எண்ணிலும், சங்கவி 81110 55320 என்ற எண்ணிலும், குடிமங்கலம் உள்வட்டத்தை சேர்ந்த விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சரவணகுமார் 97891 97648 என்ற எண்ணிலும், மதன் 97867 78651 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு, தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை