உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகரில் இரவில் தீவிர ரோந்து பணி

மாநகரில் இரவில் தீவிர ரோந்து பணி

திருப்பூர்: கோவை கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவம் எதிரொலியாக மாநகரம், புறநகர பகுதியில் போலீசார் தீவிரமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் கடந்த, 2ம் தேதி இரவு விமான நிலையத்தின் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆண் நண்பருடன் காரில், கல்லுாரி மாணவி பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த, மூன்று பேர், காரை உடைத்து, வாலிபரை வெளியில் இழுத்து தாக்கினர். மாணவியை, இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதுதொடர்பாக, மூன்று பேரை போலீசார் சுட்டுபிடித்தனர். இதன் எதிரொலியாக, திருப்பூர் மாநகரம், புறநகரில் கடந்த, ஒரு வாரம் காலமாக போலீசார் இரவில் தீவிரமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதி, ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதி மற்றும் போலீஸ் 'செக்போஸ்ட்'களில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். குடியிருப்பு பகுதி மட்டுமல்லாமல், புறநகரில் உள்ள ஆங்காங்கே வீடுகளுடன் உள்ள காட்டுப்பகுதி போன்ற இடங்களில் வலம் வருகின்றனர். வாகன தணிக்கை செய்யும் போது, விலாசம், மொபைல்போன் எண் போன்ற விபரங்களை கேட்டு பெறுகின்றனர். காவலன் செயலிவிழிப்புணர்வு மேலும், காவலன் செயலி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் மோசடி குறித்து பள்ளி, கல்லுாரி, தொழில் நிறுவனங்களில் அன்றாடம் சுழற்சி முறையில் போலீசார் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, மகளிர் போலீசார், 'போக்சோ', காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆபத்தான நேரங்களில், காவலன் செயலியை எப்படி பயன்படுத்துவது போன்றவை செய்து காட்டி வருகின்றனர். போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது: நகரில், இரவு நேரங்களில் தீவிரமாக ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புறநகர பகுதிகளில் உள்ள வீடுகள், ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் கூடுதலாக கண்காணிப்பு பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவலன் செயலி போன்ற போலீஸ் ஆப்கள் குறித்து அனைத்து தரப்புக்கும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. போதை பொருள் தடுப்பு, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் எடுத்து கூறப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர். போலீஸ் பற்றாக்குறை: போலீஸ் பற்றாக்குறை என்பது மாநகரம் மட்டும் அல்லாமல், புறநகரிலும் உள்ளது. குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் மட்டுமே போலீசார் போதிய அளவுக்கு உள்ளனர். மற்ற ஸ்டேஷன்களில் ரோந்து பணிக்காக, வேறு பணிகளில் உள்ள போலீசார், சைபர் கிரைம், குற்றப்பிரிவு போன்ற பிரிவுகளில் உள்ள போலீசாரை பயன்படுத்தி வருகின்றனர். பற்றாக்குறையை தீர்க்க உயரதிகாரிகளிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, எவ்வித நடவடிக்கையும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ