உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வட்டி சமன்படுத்தும் திட்டம் நீட்டிக்கப்பட வேண்டும்! பட்ஜெட் தயாரிப்பு கூட்டத்தில் ஏ.இ.பி.சி., வலியுறுத்தல்

வட்டி சமன்படுத்தும் திட்டம் நீட்டிக்கப்பட வேண்டும்! பட்ஜெட் தயாரிப்பு கூட்டத்தில் ஏ.இ.பி.சி., வலியுறுத்தல்

திருப்பூர்: ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்கான, ஏற்றுமதி கடனுக்கான வட்டி சமன்படுத்தும் திட்டத்தை நீட்டிக்க வேண்டுமென, ஏ.இ.பி.சி., வலியுறுத்தியுள்ளது.மத்திய அரசின், 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட், பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழு, பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு நடத்தி வருகிறது.இந்நிலையில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) சார்பில், பட்ஜெட் தொடர்பான கோரிக்கைகள் நேற்று முன்வைக்கப்பட்டுள்ளது.ஏ.இ.பி.சி., பொது செயலர் மிதிலேஷ்வர் தாக்கூர், பட்ஜெட் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார்.

வேண்டும் வட்டி சலுகை

நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்தும் மானியம் மற்றும் வட்டி சலுகை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் சார்ந்த சமூக திட்டங்களை செயல்படுத்தும் ஏற்றுமதியாளர்களுக்கு, ஆடை உற்பத்தியில் வரிச்சலுகை வழங்க வேண்டும்.ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய ஏற்றுமதிக் கடனுக்கான வட்டி சமன்படுத்தும் திட்டம், டிச., 31ம் தேதியுடன் முடிந்தது; அத்திட்டத்தை நீட்டிக்க வேண்டும். ஜி.எஸ்.டி.,யில், செயற்கை நுாலிழைகள் மற்றும் துணிகளுக்கு, 5 சதவீதம் மட்டும் வரிவிதிக்கப்பட வேண்டும்.

சுங்கவரியில் விலக்கு

செயற்கை நுாலிழை (பைபர்)களுக்கான ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக உள்ளது; நுாலுக்கு, 12 சதவீதம், துணிக்கு 5 சதவீதம் என வரிவிதிக்கப்படுகிறது; அனைத்து நிலைக்கும், 5 சதவீத வரி மட்டும் விதிக்கப்பட வேண்டும். மூலப்பொருள் இறக்குமதிக்கும் தேவையான சலுகைகளை வழங்க வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, 45 நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும் என்ற விதியை நீக்க வேண்டும்; ஆயத்த ஆடை உற்பத்தி இயந்திரங்களுக்கு, சுங்கவரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். வட்டி சமன்படுத்தும் திட்டத்தில், 5 சதவீத சலுகை வழங்கும் திட்டத்தை நீட்டிக்க வேண்டும்.

'இ-காமர்ஸ்' கட்டுப்பாடு

'இ - -காமர்ஸ்' ஏற்றுமதி மதிப்பின் ஒரு சரக்குக்கான வரம்பு, குறைந்தபட்சம் 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும். ஆடை ஏற்றுமதி துறை, சர்வதேச அளவிலான போட்டியை சமாளிக்க, இறக்குமதி இயந்திரங்களை பெரிதும் நம்பியுள்ளன. நடைமுறையில் உள்ள இறக்குமதி வரிகளில் இருந்து சலுகை வழங்க வேண்டும். பட்ஜெட்டில், தொழில் பாதுகாப்பு அறிவிப்புகள் இடம்பெற வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை