சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம்; மாணவர்களுக்கு ஓவிய போட்டி
உடுமலை; சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடந்தது.உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், எம்.ஜி சஞ்சீவ்ராஜ் நினைவு அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் வரவேற்றார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி 'சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் நோக்கம்' குறித்து பேசினார். அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ், உறுப்பினர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு ஒவ்வொரு பிரிவாக பல்வேறு தலைப்புகளில் ஓவியப்போட்டி நடந்தது. தொடர்ந்து சிட்டுக்குருவி குறித்து குறும்படம் திரையிடப்பட்டது.மேலும், விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. ஆனைமலை புலிகள் காப்பக உயிரியல் ஆய்வாளர் மகேஷ்குமார் அங்குள்ள விலங்குகள், பறவைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.நிறைவு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள், கல்வியாளர்கள் நிறைவு விழாவில் பங்கேற்றனர்.