அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2வது திட்டம் சாத்தியமா?
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், கூடுதல் குளம், குட்டைகளை இணைக்கும் கோரிக்கை பிரதானமாக உள்ளது. ஏற்கனவே, செயல்பாட்டில் உள்ள திட்டத்தின் கீழ், சில இடங்களில், தண்ணீர் வினியோகம் சீராக இல்லை என்ற புகாரும் இருக்கிறது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள, 1,047 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் நோக்கில், 1,916 கோடி ரூபாய் மதிப்பில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திட்டத்தில் விடுபட்ட, 1,400 குளம் குட்டைகளையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற துவங்கியிருக்கிறது. இதுகுறித்து, விவசாயிகளாகவும், அந்தந்த பகுதி அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களாகவும் உள்ள சிலரது கருத்துகள், இங்கே இடம்பெற்றுள்ளன.
வேகமில்லாத வேலை
அத்திக்கடவு திட்டத்தில், விடுபட்ட குளம் குட்டைகளை இணைத்து, இரண்டாம் கட்டப்பணிகளை துவக்க வேண்டும் என்ற, விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அரசின் நடவடிக்கையில் வேகமில்லை. அதே நேரம், தற்போது செயல்பாட்டில் உள்ள அத்திக்கடவு திட்டத்தில் நீர் வினியோகம் முழுமை பெறவில்லை. உதாரணமாக, வரப்பாளையம், 5வது நீரேற்று நிலையத்தில் இருந்து, 2 இஞ்ச் அளவுள்ள குழாய் வழியாக, நீர் வினியோகிக்கப்படுகிறது; குழாய் உடைப்பு, அடைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளால், சரிவர நீர் வருவதில்லை.கருவலுார் - மேட்டுப்பாளையம் சாலையின் தெற்கு பகுதியில், தெக்கலுார், குளத்துப்பாளையம், கிட்டாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குளம், குட்டைகளுக்கு, 5 சதவீதம் கூட நீர் வரவில்லை. இப்பிரச்னையை சரி செய்ய வேண்டும் என அமைச்சர் முத்துசாமி தலைமையில், 3 முறை நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்தும், எதிர்பார்த்த பலனில்லை; மாவட்ட கலெக்டரிடமும் புகார் தெரிவித்துள்ளோம். எனவே, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டத்தில் தொய்வில்லாத படி நீர் வினியோகம் செய்யவும், இரண்டாம் கட்ட பணியை விரைவில் துவக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தங்கமுத்துசாமி, தெக்கலுார்.நிதி ஒதுக்க வேண்டும்அத்திக்கடவு திட்டத்தில் இணைக்கப்பட வேண்டிய குளம், குட்டைகள் நிறைய இருக்கிறது. இதுதொடர்பாக அரசுக்கும், துறை அமைச்சர்களுக்கும் தொடர்ந்து மனு வழங்கி வருகிறோம். அரசின் அணுகுமுறை, திருப்திகரமாக இல்லை. 'விடுபட்ட குளம், குட்டைகள் இணைக்கப்படும்' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டசபையில் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதுதொடர்பாக, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிட வேண்டும்.- பிரபாகரன், கருமத்தம்பட்டி.
தமிழக அரசு பரீசிலிக்குமா?
அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க, 5,000 கோடி ரூபாய் வரை செலவாகும் என, நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது, வியப்பளிக்கிறது. காரமடை பகுதியில் மட்டும் ஒரு பம்பிங் ஸ்டேஷன் அமைத்தால் போதும். எஞ்சிய இடங்களில் ஏற்கனவே, பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் நீட்டிப்பு செய்தாலே விடுபட்ட குளம், குட்டைகளுக்கு நீர் கொண்டு சென்று சேர்க்க முடியும். இதனை அரசு பரிசீலிக்க வேண்டும்.- நவீன்பிரபு, அவிநாசி.