உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நுாறு நாள் திட்ட சம்பளத்தை விட பனியன் தொழிலாளருக்கு குறைவா? முதல்வருக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் கடிதம்

நுாறு நாள் திட்ட சம்பளத்தை விட பனியன் தொழிலாளருக்கு குறைவா? முதல்வருக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் கடிதம்

திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தை குறைத்து அறிவித்து தொழிலாளர் நலத்துறை வஞ்சித்துள்ளது. அந்த அநீதியைப் போக்கி, தொழிலாளர் களுக்கு சட்டப்படி நியாயமான ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சி.ஐ.டி.யு., பனியன் பொதுத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.தமிழக அரசின், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி, கடந்த பிப்., 18ம் தேதி குறைந்தபட்ச ஊதியத்தை திருத்தி அறிவித்துள்ளது.பனியன் மற்றும் பின்னலாடை உற்பத்தி துறையில் கட்டிங், டெய்லரிங், அயனிங், பேக்கிங், பேப்ரிகேஷன், செக்கிங், கைமடி, ஹெல்ப்பர் உள்ளிட்ட பல பிரிவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சென்னை நகர விலைவாசி குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு, 2012ல், 196 புள்ளிகள் அடிப்படையில், மாதம் 23.19 ரூபாய் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஜன., 31ல் வெளியிட்ட குறைந்தபட்ச ஊதிய அறிவிப்பில், 2010ம் ஆண்டு 161 புள்ளிகளுக்கு, மாதம் 28 ரூபாய் அகவிலைப்படி வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.கடந்த 2024 ஜன., வெளியிட்ட வரைவு அறிக்கையில் இருந்த அகவிலைப்படியை குறைத்துள்ளது தொழிலாளர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய கணக்கீட்டுப்படி, அகவிலைப்படியாக மாதம், 5,152 ரூபாய் கிடைக்கும்; தற்போதைய கணக்கீட்டால், 3,456 ரூபாய் மட்டுமே கிடைக்கும் என, தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால், ஒரு தொழிலாளிக்கு, மாதம் 1,700 ரூபாய் வரை வருவாய் குறைந்துள்ளது.கடந்த, 2024 பிப்., மாதம் குறைந்தபட்ச ஊதிய முன்மொழிவில், ஆலோசனைகளை அனுப்பும்படி தொழிலாளர் நலத்துறை கேட்டிருந்தது. அதற்கேற்ப, குறைந்தபட்ச மாத ஊதியமாக, 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியிருந்தன. தற்போதைய கூலி நிர்ணயம், வேலை உறுதி திட்ட சம்பளத்தைவிட குறைவு என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.சம்பத், சி.ஐ.டி.யு., பனியன் சங்க பொது செயலாளர்:கடும் விலைவாசி உயர்வால் தொழிலாளர் குடும்பங்கள் சிரமத்தில் உள்ளன. பஞ்சப்படியை குறைத்து வஞ்சித்துள்ளதை ஏற்க முடியாது. லேபிள், கைமடி, டேமேஜ், அடுக்கி கட்டுதல் ஆகிய நான்கு பிரிவு தொழிலாளர்களுக்கு, 100 நாள் திட்டத்தை காட்டிலும் கூலி குறைவாக நிர்ணயித்துள்ளனர்.கடந்த, 2016ம் ஆண்டுக்கு பின், குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்ததே தாமதமானது. குறிப்பாக, நடைமுறை சம்பளத்தை காட்டிலும் குறைத்து நிர்ணயம் செய்துள்ளதால், தொழிலாளர் அதிகம் பாதிக்கப்படுவர். மீண்டும் அகவிலைப்படியை கணக்கிட்டு, அதற்கேற்ப சம்பள நிர்ணயம் செய்ய வேண்டும்.சேகர், ஏ.ஐ.டி.யு.சி., பனியன் சங்க பொது செய லாளர்:அறிவியல் பூர்வமாக கணக்கிட்டு, புதிய சம்பள நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச பனியன் தொழிலாளர் சம்பள அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். மீண்டும் ஆலோசித்து, திருத்திய அறிவிப்பை வெளியிட வேண்டும்.இதுதொடர்பாக, முதல்வர், தொழிலாளர் துறை கமிஷனர், செயலர் அமைச்சருக்கு பதிவு தபால் அனுப்பியுள்ளோம்; பதிலுக்கு காத்திருக்கிறோம்; பதில் வந்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.கண்ணபிரான், ஏ.டி.பி., மாவட்ட செயலாளர்:பனியன் தொழிலாளர் நடைமுறையில் பெறும் சம்பளத்தை காட்டிலும் குறைவான சம்பளத்தை அரசு நிர்ணயித்துள்ளது. முன்பு இருந்த அகவிலைப்படியை குறைத்தது, தொழிலாளர் விரோதமானது. அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி யுள்ளபடி, தற்போதைய விலைவாசிக்கு ஏற்ற சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.சிவசாமி, ஐ.என்.டி.யு.சி., பொது செயலாளர்:அரசு வெளியிட்டுள்ள அகவிலைக்கு வித்தியாசம் இருக்கிறது. அகவிலைப்படி சரியான முறையில் கணக்கிட்டால், குறைந்தபட்ச சம்பள நிர்ணயமும் சரியாக இருக்கும். அரசு அதிகாரிகள் தவறு இழைத்துள்ளனர். தமிழக அரசு தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்; அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுக்க முதல்வர் அனுமதிக்க கூடாது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால், அதன் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.மனோகரன், எம்.எல்.எப்., பனியன் சங்க செயலாளர்:தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்துள்ளதில் குளறுபடி அதிகம் இருக்கிறது. அகவிலைப்படியை குறைத்து மதிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக, முதல்வருக்கு விரிவாக கடிதம் அனுப்பியுள்ளோம். பதில், வந்ததும், அடுத்தகட்ட முயற்சி மேற்கொள்ளப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை