சோதனை நடத்துவது அவசியம்
திருப்பூர்; சமூக ஆர்வலர் சரவணன் என்பவர், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் அளித்த மனு:திருப்பூர் மாநகராட்சி மற்றும் அவிநாசி, காங்கயம், ஊத்துக்குளி, தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் பகுதி சாலையோர கடைகளில், பிளாஸ்டிக் பேப்பரில் உணவு பதார்த்தங்களை கட்டிக் கொடுக்கின்றனர். பிரியாணி, கொத்து பரோட்டா, பிரைடு ரைஸ் போன்ற உணவுகளை சுடச்சுட, பிளாஸ்டிக் பேப்பரில் கட்டி கொடுக்கின்றனர். இவற்றை வாங்கி உண்ணும் மக்களுக்கு புற்று நோய் உட்பட பல நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.குறிப்பாக, இரவு நேர கடைகளிலேயே இதுபோன்ற விதிமீறல்கள் அதிகம் நடக்கின்றன. எனவே, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், இரவு நேர உணவு விற்பனை கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து தொடர் சோதனைகள் நடத்தி, கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.