2002ம் ஆண்டு வாக்காளர் திருத்த பட்டியலில் விவரம் தேடி கண்டறிந்து சரிபார்ப்பது அவசியம்
திருப்பூர்: தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது.வாக்காளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் படிவத்தில், சுய விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும். கடந்த 2002 தீவிர திருத்த பட்டியல் விவரங்களை அளிக்காதபட்சத்தில், டிச. 9ல் வரைவு பட்டியல் வெளியான பின், வாக்காளர், தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை, சட்டசபை தொகுதியின் வாக்குப்பதிவு அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டிவரும்.முந்தைய தீவிர திருத்த பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை கண்டறிவதற்கான வசதிகளை, தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் சேர்த்துள்ளது. வாக்காளர் பலரும், 2002 தீவிர திருத்த பட்டியலில், தற்போது தங்கள் வசமுள்ள வாக்காளர் அட்டை எண் அடிப்படையில், தேடுகின்றனர்; இது தவறு. இந்தவகை தேடுதலால், முந்தைய பதிவுகளை கண்டறியமுடியாமல் சிரமப்படுகின்றனர். தேடும் முறை
முதலில், https://erolls.tn.gov.in/electoralsearch/ என்கிற தளத்துக்குள் செல்ல வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையிலான தேடுதலை விட பெயர் அடிப்படையிலான தேடுதலே சுலபமானது. பெயர் அடிப்படையிலான அடிப்படையிலான தேடுதலை தேர்வு செய்து உள்ளே செல்ல வேண்டும். 2002ல் வாக்காளரின் மாவட்டம், அப்போதைய சட்டசபை தொகுதி ஆகியவற்றை தேர்வு செய்யவேண்டும்.அடுத்து, வாக்காளரின் பெயர், உறவினர் பெயரை ஆகியவற்றை தமிழில் பதிவு செய்யவேண்டும். பாலினத்தை தேர்வு செய்து, 'வெரிபிகேஷன் கோடை' அளித்து, 'சப்மிட்' கொடுத்தால் போதுமானது. கடந்த 2002ம் ஆண்டு பட்டியலில் பெயர் இருப்பின், அப்போதைய வாக்காள அட்டை எண், சட்டசபை தொகுதியில் பெயர், பாகம், வரிசை எண், வாக்காளரின் பெயர் மற்றும் உறவினர் பெயர் விவரங்கள் கிடைக்கும்.ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளரின் பெயர் கிடைக்கும்போது, அதில், தங்களது பெயர் எது என சரியாக கண்டறிவதில் குழப்பம் ஏற்படலாம். தேடுதலில் கிடைக்கும் வாக்காளர் அட்டை எண்ணை கிளிக் செய்தால், ஓட்டுச்சாவடி உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கும்; அதனடிப்படையில், விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.தேடுதலில் பெறப்படும் வாக்காளர் அடையாள அட்டை எண், பெயர், சட்டசபை தொகுதி தொகுதி, பாகம் எண், வரிசை எண் விவரங்களை, குறித்து வைத்து கொள்ளவேண்டும். பி.எல்.ஓ. வீடு தேடி வந்து படிவம் வழங்கியபின், 2002 தீவிர திருத்த பட்டியலில் இடம்பெற்ற வாக்காளர் அல்லது உறவினரின் விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும்.
இதிலும் ஒரு குழப்பம்
2002 தீவிர திருத்த பட்டியல் தேடுதலின்போது, ஒரே வாக்காளர் - உறவினர் பெயர் கொண்ட, ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் கிடைக்கின்றன. சில வாக்காளர்களுக்கு, பழைய வாக்காளர் அடையாள அட்டை எண் விவரம் இடம் பெறவில்லை. அத்தகைய வாக்காளர்கள், தேடுதலில் பெறப்பட்ட விவரங்கள் தங்களுடையது தான் என்பதை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. பெயர் ஒற்றுமை காரணமாக, தவறுதலாக, வேறு வாக்காளரின் விவரங்களை பூர்த்தி செய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால், புதிய குழப்பங்கள் வரலாம். இதனை முன்னரே சரி செய்யவேண்டும். ஓட்டுச்சாவடி வாரியாக 2002 தீவிர திருத்த பட்டியல் விவரங்களை பார்வைக்கு வைக்கலாம் என, அரசியல் கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.