கலெக்டர் ஆபீஸ் முன் ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
திருப்பூர்; ஜாக்டோஜியோ சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், பாண்டி யம்மாள், வேலுமணி, ராஜேந்திரன் உள்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். கடந்த 2003, மார்ச் 1க்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும், சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நுாலகர், கல்வித்துறையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை, அரசு ஊழியர்கள், ஆசிரியர், அரசு பணியாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.