மருத்துவக் கழிவுகளுடன் கேரள லாரி சிறைபிடிப்பு
பல்லடம்; பல்லடம் அருகே, மருத்துவ கழிவுகள் ஏற்றி வரப்பட்ட லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, பணிக்கம்பட்டி ஊராட்சி, வேலப்பகவுண்டம்பாளையம் கிராமத்தில், ஒரு தோட்டத்தையொட்டி, வேஸ்ட் குடோன் உள்ளது. நேற்று, கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து, மருத்துவ கழிவுகள் ஏற்றியபடி லாரி ஒன்று குடோனுக்கு வந்தது. தகவலறிந்த பொதுமக்கள், லாரியை சிறை பிடித்தனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், லாரியை பறிமுதல் செய்தனர்.பொதுமக்கள் கூறுகையில், 'குடோன் உரிமையாளரின் அனுமதியுடன் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்படும். மருத்துவ கழிவுகளை உடனடியாக இங்கிருந்து அகற்ற வேண்டும்.பெயரளவுக்கு அபராதம் மட்டும் விதித்துவிட்டு சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடக்கூடாது' என்றனர்.