உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாழை, பாக்கு மர நாரில் நுால் உற்பத்தி ரூ.8 கோடியில் திருப்பூரில் அமைகிறது ஆய்வகம்

வாழை, பாக்கு மர நாரில் நுால் உற்பத்தி ரூ.8 கோடியில் திருப்பூரில் அமைகிறது ஆய்வகம்

திருப்பூர்:'யுனிடோ'வின், 8 கோடி ரூபாய் பங்களிப்புடன், ஆபத்தான ரசாயனமில்லாத ஆடை உற்பத்திக்கான வழிகாட்டி ஆய்வகம் திருப்பூரில் அமைகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தன்னாட்சி அமைப்பாக, 'யுனிடோ' என்ற, ஐக்கிய நாடுகள் தொழில் மேம்பாட்டு அமைப்பு இயங்கி வருகிறது. உலக நாடுகளில், நீடித்த நிலையான பசுமை சார் உற்பத்தி தொழில்நுட்பம் மேம்பட வேண்டும் என்ற நோக்குடன், இந்த அமைப்பு சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, பசுமை சார் உற்பத்தியை ஊக்குவிக்க, எட்டு 'கிளஸ்டர்'கள் தேர்வு செய்யப்பட்டு, 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மத்திய அரசின் முயற்சியால், நம் நாட்டில், ஜவுளி உற்பத்தியில் ஈடுபடும், எட்டு கிளஸ்டர்களும் இதனால் பயன்பெற உள்ளன. இது குறித்த, தொழில் அமைப்பு பிரதிநிதிகளுடன், டில்லியில் கடந்த மாதம் நடந்த ஆலோசனையை தொடர்ந்து, 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வழிகாட்டி ஆய்வகம் அமைய உள்ளது. வாழை மரம், பாக்குமர நாரில் இருந்து ரசாயனமில்லா ஆடை உற்பத்திக்கு வழிகாட்டும் ஆய்வகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க ஆலோசகர் பெரியசாமி கூறுகையில், ''யுனிடோ மற்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில், திருப்பூர், லுாதியானா, சூரத், இச்சல்கரஞ்சி உட்பட எட்டு கிளஸ்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திருப்பூரில், பருத்தி நுாலிழையுடன், இயற்கையான பொருட்களில் இருந்து நுாலிழை தயாரிக்கும் முயற்சி துவங்கும். ''விரைவில், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உற்பத்தி வழிகாட்டி ஆய்வகம் அமைக்கப்படும். அதன் பின், ஆபத்தான ரசாயனமில்லா ஆடை உற்பத்திக்கு வழிகாட்டப்படும். அங்கீகார சான்றிதழ் வழங்கப்படுவதால், அதன் வாயிலாக, ஏற்றுமதி ஆர்டர்களை கூடுதலாக பெறலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை