உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இயற்கை மருந்துதான் சிரிப்பு

இயற்கை மருந்துதான் சிரிப்பு

திருப்பூர்; ''சிரிப்பு என்பது, கடவுள் கொடுத்த வரம்; இயற்கை கொடுத்த கொடை; சிரிப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என, டாக்டர் சந்தானகிருஷ்ணன் பேசினார். திருப்பூர் நகைச்சுவை முற்றம் டிரஸ்ட் சார்பில், 'சிரிப்போம்... சிந்திப்போம்' என்ற மாதாந்திர நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. செயலாளர்பூபதிராஜன் வரவேற்றார். திருப்பூர் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார். 'உடலே நலமா? என்ற தலைப்பில், சென்னையை சேர்ந்த பேராசிரியர் பொன்னி பேசினார்; 'மனமே சுகமா? என்ற தலைப்பில், பேராசிரியர் சவுமித்ரன் பேசினார். 'உற்சாகமும், உடல் விஞ்ஞானமும்' என்ற தலைப்பில், கோவையை சேர்ந்த டாக்டர் சந்தானகிருஷ்ணன் பேசியதாவது: வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும். பிறந்த குழந்தைகள், சில நாட்களில் இருந்தே சிரிக்க துவங்குகிறது; காரணமே இல்லாமல் சிரிக்கும்; பகைவனை கண்டாலும் சிரிக்கும் ஆற்றல் பெற்றது. சிரிப்பு என்பது, கடவுள் கொடுத்த வரம்; இயற்கை கொடுத்த கொடை; சிரிப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஜப்பான் மக்கள், அதிக நேரம் சிரிப்பதால், அதிக ஆண்டுகள் வாழ்கின்றனர். சிரிப்பு என்பது, மனிதருக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம். திபெத் பகுதி மக்கள், அரை வயிறு சாப்பாடு, இரண்டு மடங்கு நடை பயிற்சி; மூன்று மடங்கு சிரிப்பு; அளவில்லாத பாசம் ஆகியவற்றை பின்பற்றுகின்றனர். ஆயுளை அதிகரிப்பதற்கான இயற்கையான மருந்துதான் சிரிப்பு; சிரிப்பால், மன அழுத்தம் குறையும், இருதய நோய் குணமாகும், சமூக பிணைப்பு அதிகரிக்கும். அறிவாற்றல் செயல்பாடுகள் கூர்மையாகும். உடல் நலம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும். ஜோக் கூறினால் மட்டுமே சிரிக்க வேண்டும் என்பதல்ல; பயிற்சி வாயிலாகவும் சிரிக்கலாம்; சிறப்பான வாழ்க்கையை பெறலாம். சிரிப்பில், செயற்கை, இயற்கை என்ற வேறுபாடு இல்லை; ஒரே மாதிரியான பலன்களை அளிக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி