மனிதருக்கு செம்மையான மருந்து சிரிப்புதான்
திருப்பூர்: திருப்பூர் நகைச்சுவை முற்றம் சார்பில், 'சிரிப்போம்... சிந்திப்போம்' நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் செஸ்ட் மருத்துவமனை டாக்டர் பொம்முசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், மதுரை ராமகிருஷ்ணன், 'சிரிப்பதற்கே வாழ்க்கை' என்ற தலைப்பில், பேசியதாவது: உலக மக்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. இது, அனைவரும் சிரிக்க வேண்டிய தருணம். என்ன காரணம் என்றே தெரியாமல் கோபப்படுகிறோம். சிரிப்பு மட்டுமே மனிதருக்கு செம்மையான மருந்து. சிரிப்பு வாயிலாக மட்டுமே பெரிய சிந்தனையை கடத்த முடியும். கோபம் நமது கண்ணை மறைத்து விடும். விழிப்புணர்வுக்கு அவசியம் சிரிப்பு. வாழ்தல், பிழைத்தல், இருத்தல் என்று மூன்று வகை உள்ளது. தெளிவான சிந்தனை, சிரிப்புடன் வாழ்வதே வாழ்க்கை. சிரிப்பாமல் வாழ்வது தேவையற்றது. அதைத்தான், பிழைத்தல், இருத்தல் என்கிறோம். மகிழ்ச்சியும், சிரிப்பும் இல்லாத வீடு ஜெயில் போன்றது. ஜெயலில் வாழ்கிறேன் என்று கூறமாட்டார்கள். ஜெயிலில் இருக்கிறேன் என்று தான் கூறுவர். ஆண், அறிவியல் சார்ந்து சிந்திப்பான். பெண், அழகியல் சார்ந்து சிந்திப்பாள். இருவருக்குமே சிரிப்பு என்பது அவசியமானது. திருப்பூர் நகைச்சுவை முற்றத்தின் முழு முயற்சியால், திருப்பூர் எப்போதும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க வேண்டும்; நகைச்சுவை கலந்த நல்வாழ்வு வாழ வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். வீடுகளுக்கு 'சிசிடிவி' அவசியம் நிகழ்ச்சியில், நல்லுார் உதவி கமிஷனர் தையல்நாயகி பேசுகையில், ''டூ வீலர் விபத்து அதிகம் நடக்கும் மாவட்டங்களில், திருப்பூர் ஐந்தாவது இடத்தில் உள்ளது கட்டாயம் ெஹல்மெட் அணிய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களும், 1.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள் குற்றத்துடன் இணைந்து, 'சைபர்' குற்றங்களும் நடக்கின்றன. குழந்தைகள், மொபைல் போன் பயன்பாடு குறித்து பெற்றோர் கண்காணிக்க வேண்டும். கட்டாயம் வீடுகளில், 'சிசிடிவி' பொருத்தி பாதுகாப்பாக வாழ வேண்டும். தீபாவளி பட்டாசு வெடிக்கும் போதும், பெற்றோர் உடனிருந்து, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும், பாதுகாப்பாக வெடிக்க வேண்டும்,'' என்றார்.