அவிநாசி அருகே சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்: வனத்துறையினர் சமாளிப்பு
அவிநாசி; அவிநாசி அருகே பெருமாநல்லுார் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, வெளியான தகவல் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பொங்குபாளையம் ஊராட்சி, அம்மன் நகர், 2வது வீதியில் வசிப்பவர் செந்தில்குமார், 40. அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது வசிக்கும் வீட்டின் முன், பக்கத்தில் வீடு கட்ட எம்-சாண்ட் மண் கொட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, 9.45 மணியளவில் செந்தில்குமார், அவரின் மனைவி கார்த்திகா மற்றும் அருகில் வசிக்கும் சந்திரா உள்ளிட்டோர், வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கொட்டப்பட்டிருந்த மண் திட்டில், வித்தியாசமான உருவம் ஒன்று படுத்துக் கொண்டிருப்பதை பார்த்து செந்தில்குமாரிடம் கூறியுள்ளார். போதிய வெளிச்சம் இல்லாததால், வீட்டிலிருந்த தடியை எடுத்துக்கொண்டு மண் திட்டை நோக்கி செந்தில்குமார் சென்றுள்ளார். அதற்குள் கார்த்திகா டார்ச் லைட் எடுத்து வந்து மண் திட்டை நோக்கி, வெளிச்சம் காட்டவும், உடம்பில் கருப்பு புள்ளிகளுடன் நீண்ட வாலும் தலை பெரியதாகவும் கொண்ட உருவம் தாவி ஓடியுள்ளது. உடனே சுதாரித்த செந்தில்குமார், சிறுத்தை என்பதை உணர்ந்து அங்கிருந்து தப்பி வந்து, அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அருகிலேயே, 200 அடி துாரத்தில் பெரிய பாறைக்குழி ஒன்று உள்ளது. தப்பிச் சென்ற சிறுத்தை, அதில் சென்று பதுங்கியிருக்கலாம், என்று தீயணைப்புத்துறையினருடன் சேர்ந்து வனத்துறையினர் என தேடத் துவங்கினர். சிறுத்தை தான்...கடந்த திங்களன்று இரவு வீட்டு முன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எனது மனைவி வீட்டின் முன்பு கொட்டப்பட்டிருந்த மண் குவியலை காட்டி, வித்தியாசமான உருவம் தெரிகிறது என்றார். டார்ச் லைட் வெளிச்சத்தை காட்டியவுடன் தான் சிறுத்தை என தெரிந்தது. சத்தம் போடவும் ஒரே தாவில் தாவி ஓடியது. உடனே சுதாரித்து நானும் ஓடி வந்தேன். அருகில் இருந்தவர்கள் அனைவருமே சிறுத்தையை நன்றாக பார்த்தோம். - செந்தில்குமார்,சிறுத்தையை நேரில் பார்த்தவர்.