உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அஞ்சுதலை வேண்டுவோம்... ஆறுதலை பெறுவோம்!

அஞ்சுதலை வேண்டுவோம்... ஆறுதலை பெறுவோம்!

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, காங்கயம் - சிவன்மலை சுப்ரமணியர் கோவில், கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவில், அலகுமலை முத்துக்குமார பாலதாண்டாயுதபாணி சுவாமி கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில்களில், நேற்று முன்தினம், சுவாமி திருக்கல்யாணமும், வெள்ளையானை வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெற்றது. நேற்று, தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம் நடைபெற்றது.ஊத்துக்குளி, கதித்தமலை வெற்றி வேலாயு சுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவில், 10ம் தேதி மாலை, ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று, காலை, உற்சவமூர்த்திகள் அடிவாரத்தில் உள்ள தேரில் எழுந்தருளினர். மதியம், தேரோட்டம் துவங்கியது; மாலையில், தேர் நிலையை வந்தடைந்தது.நாளை, (13ம் தேதி) தெப்ப உற்சவமும், 14ம் தேதி காலை, 10:15 மணிக்கு, உற்சவமூர்த்திகள் மலை மீது உள்ள தேர்களில் எழுந்தருளி, தேரோட்டம் நடக்க உள்ளது. சிவன்மலை ஸ்ரீசுப்ரமண்யர் கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா தேரோட்டம் நேற்று சிறப்பு வழிபாடுடன் துவங்கியது. மலை மீது இருந்து, வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமண்ய பெருமான், அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினர். நேற்று முன்தினம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று மாலை தேரோட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இன்று, நாளையும் தேரோட்டம் நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். வரும், 20ம் தேதி சுவாமி மீண்டும் மலை மீது எழுந்தருளியதும், மஞ்சள் நீர் விழா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கும். பொங்கலுார், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவில், நேற்று காலை, 6:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம், 12:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அமைச்சர் சாமிநாதன் வடம் பிடித்து துவக்கி வைத்தார். விநாயகர் தேர் முன் செல்ல, தொடர்ந்து, அம்மன் தேரும், நிறைவாக முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி தேரும் சென்றது. பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன், பொங்கலுார் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர். பாதயாத்திரை குழு, தைப்பூச குழுக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கருமத்தம்பட்டி, விராலிக்காடு, ஸ்ரீசென்னியாண்டவர் கோவிலில், நேற்று முன்தினம், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணம் நடந்தது. இரவு, யானை வாகனத்தில் திருவீதியுலா நடந்தது; நேற்று மாலை, உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. மங்கலம், மலைக்கோவில் குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை முதல், சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து, பக்தர்கள் காவடி எடுத்தபடி பாதயாத்திரையாக வந்து முருகரை வழிபட்டனர். வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நேற்று காலை தேரில் எழுந்தருளினர். விநாயகர் தேர் முன் செல்ல, முருகர் தேர், தேர்வீதிகளை வலம் வந்து நிலை சேர்ந்தது. அரோகரா... அரோகரா... கோஷத்துடன், பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நாளை மகாதரிசனமும், 14 ம் தேதி மஞ்சள் நீர்விழாவும் நடக்கிறது. திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி ஸ்ரீ கந்தப்பெருமான் கோவில் தைப்பூச தேரோட்ட விழா நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக மாலை 3:30 மணிக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பவானி, தக்கார் சபரீஸ்குமார், மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி ஆகியோர் செய்து இருந்தனர். பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலிலுள்ள சுப்ரமண்யர் சன்னதி, பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவிலிலுள்ள ஸ்ரீசுப்ரமண்யர் சன்னதி மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து முருகப்பெருமான் கோவில்களிலும், தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ