உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அழகிய கரைகளில் பூங்காக்கள் அமைத்து குளங்களை காப்போம்! மாவட்ட நிர்வாகத்துக்கு மீண்டும் கோரிக்கை

அழகிய கரைகளில் பூங்காக்கள் அமைத்து குளங்களை காப்போம்! மாவட்ட நிர்வாகத்துக்கு மீண்டும் கோரிக்கை

உடுமலை; நகரின் அருகில் அமைந்துள்ள, குளங்களை பாதுகாக்கும் வகையில், கரைகளில் கம்பி வேலி அமைத்து, பூங்கா ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது; திட்டத்தை நிறைவேற்ற சமூக ஆர்வலர்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.உடுமலை நகரின் அருகில், ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம் உள்ளிட்ட குளங்கள் அமைந்துள்ளன. ஏழு குள பாசன திட்டத்தின் கீழ் இக்குளங்கள், பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படுகிறது. இதில், நகரில் இருந்து, 5 கி.மீ., தொலைவில், 404 ஏக்கரில் பெரியகுளம் அமைந்துள்ளது. அரசாணை அடிப்படையில், திருமூர்த்தி அணையிலிருந்து இக்குளத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கியிருப்பதால், இக்குளத்திற்கு, பல்வேறு பகுதிகளை சேர்ந்த பறவைகள் 'விசிட்' அடிப்பது வழக்கமாக உள்ளது.மேலும், திருமூர்த்திமலை ரோட்டிலிருந்து வாளவாடி கிராமம் வரை, நீண்ட துாரத்திற்கு ரோட்டின் அருகில், இக்குளத்தின் கரை அமைந்துள்ளது.சுற்றுச்சூழல் முக்கியத்தும் வாய்ந்த இந்த குளத்தின் கரை, முறையாக பராமரிக்கப்படாமல், சமூக விரோத செயல்கள் அரங்கேறும் பகுதியாக மாறி விட்டது. குறிப்பாக, கரை முழுவதும் 'குடி'மகன்கள் அனைத்து நேரங்களிலும் ஆக்கிரமித்துக்கொள்கின்றனர்.காலி மதுபாட்டில்கள் நீரிலும், கரை முழுவதும் பரவிக்கிடக்கிறது. சில நேரங்களில், குப்பையை தீ வைத்து எரிக்கின்றனர். இவ்வாறு, குளத்துக்கரையின் நிலை பார்ப்பவர்களை வேதனையடையச்செய்கிறது. இவ்வாறு, பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த இக்குளத்தை மக்கள் பார்வையிடவும், பொழுதுபோக்கவும் பல்வேறு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.குறிப்பாக, 404 ஏக்கர் நீர் தேக்க பரப்பிலுள்ள குளத்தை முழுவதுமாக துார்வாரி, உடுமலை பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணியர் பயன்படுத்தும் வகையில், 'பெடலிங் போட்' களை இயக்கலாம்.மேலும், குளக்கரையில், கம்பி வேலி அமைத்து, பூங்கா ஏற்படுத்தி, குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்களை நிறுவினால், நகர மக்களும், சுற்றுலா பயணியரும் பயன்பெறுவார்கள்.

மேம்படுத்தும் திட்டம்

சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில், குளத்துக்கரையில், பனை நாற்றுகள் நட்டு, மேம்படுத்தும் திட்டம் துவங்கியது. ஆனால், இத்திட்ட செயல்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவில்லை.இதனால், மழைக்காலத்துக்கு பிறகு, கரைகள் புதர் மண்டி, பரிதாப நிலைக்கு சென்று விடுகிறது. ஏற்கனவே அங்கு வளர்ந்துள்ள கற்பக தரு எனப்படும் பனை மரங்களும், கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.இதே போல், செங்குளம், ஒட்டுக்குளம் பகுதியிலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பல்வேறு செயல்கள் தொடர்கதையாக உள்ளது. இரவு நேரங்களில், குளங்களில் கட்டட கழிவுகளை கொட்டி செல்வது அதிகரித்துள்ளது.முக்கியத்துவம் வாய்ந்த இந்த குளங்களை பாதுகாக்கவும், மக்கள் வசதிக்காகவும், கம்பி வேலி அமைத்தல்; பூங்கா ஏற்படுத்துதல், கரையை வலுப்படுத்தி மரக்கன்றுகள் நட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மீண்டும் மனு அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை