உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மறுசுழற்சி ஆடை தயாரிப்பில் கைகொடுப்போம்: ஐரோப்பிய வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் உறுதி

மறுசுழற்சி ஆடை தயாரிப்பில் கைகொடுப்போம்: ஐரோப்பிய வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் உறுதி

திருப்பூர் : 'திருப்பூருக்கு பக்கபலமாக இருந்து, மறு சுழற்சி ஆடை உற்பத்திக்கு கை கொடுப்போம்,' என, ஐரோப்பிய நாட்டு எச் அண்ட் எம் நிறுவன பிரதிநிதிகள் உறுதி அளித்துள்ளனர்.வளம் குன்றா வளர்ச்சியில் மறுசுழற்சி ஆடை உற்பத்தி குறித்த கலந்துரையாடல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது. ஐரோப்பாவின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமான எச் அண்ட் எம் மற்றும் அதன் அங்கமான எச் அண்ட் எம் அறக்கட்டளை அதிகாரிகள், நெதர்லாந்து நாட்டு தன்னார்வ அமைப்பினர், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று கலந்துரையாடினர்.அதில், ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன் பேசுகையில், ''வெளிநாட்டு முன்னணி ஆடை வர்த்தக நிறுவனங்கள், திருப்பூரில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலான ஆடை உற்பத்தியை ஊக்கப்படுத்தி வருகின்றன. இதற்கு, கருத்தரங்கு, பயிலரங்கு ஆகியன மிகவும் அவசியம். பழைய ஆடைகளை மறுசுழற்சி செய்யும் மாதிரி இயந்திரம் ஒன்றை, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்துக்கு வழங்கினால், உற்பத்தியாளர்களுக்கு செயல் விளக்கம் அளித்து, அவர்களை ஊக்கப்படுத்த முடியும்,'' என்றார்.ஏற்றுமதியாளர்கள் சங்க இணைச் செயலாளர் குமார் துரைசாமி பேசியதாவது:திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி தொழில் துறை, இயல்பாகவும், இயற்கையாகவும் அமையப்பெற்றது. இந்த கட்டமைப்பில், 80 சதவீதத்துக்கு மேல் குறு, சிறு நிறுவனங்கள்தான் இருக்கின்றன. வெளிநாட்டு மிகப்பெரிய ஆடை வர்த்தக நிறுவனங்கள், திருப்பூர் நிறுவனங்களுக்கு தொடர்ந்து வர்த்தக வாய்ப்புகளை வழங்கி, வளம் குன்றா வளர்ச்சியை ஊக்கப்படுத்தவேண்டும்.திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கு தனி முத்திரையும், ஆடை உற்பத்தி விலையில் சலுகையும் வழங்க வேண்டும். இதனால், உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி மையங்கள் கவரப்பட்டு, வளம் குன்றா வளர்ச்சி உற்பத்தி அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, வணிக ஊக்குவிப்பு, பிரின்டிங் மற்றும் நிலைத்தன்மை துணை குழுவின் தலைவர் ஆனந்த், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சர்வதேச அளவில் பல்வேறு அமைப்புகளுடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும், வளம் குன்றா வளர்ச்சி உற்பத்தி குறித்தும் விளக்கி பேசினார்.எச் அண்ட் எம் நிறுவன பிரதிநிதி கரோலா பேசியதாவது:இந்த கலந்துரையாடல் வாயிலாக, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் துறையின் மகத்துவம் குறித்தும் தெளிவாக தெரிந்து கொண்டுள்ளோம். உலகிலுள்ள அனைத்து உற்பத்தி கேந்திரங்களுக்கும் திருப்பூர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. உற்பத்தியில் வெளியேறும் கழிவு துணிகளை கொண்டு மறு சுழற்சி செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்டமாக, உபயோகித்த பழைய ஆடைகளை மறுசுழற்சி செய்யவேண்டும். இதற்கான திருப்பூரின் அனைத்து முயற்சிகளுக்கும் எங்களால் இயன்ற உதவிகளை செய்து, துணை நிற்போம். வர்த்தக பிரதிநிதிகளுடன் பேசி, திருப்பூரிலிருந்து அதிகளவு ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை