உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நுாலக கட்டட பராமரிப்பு துவக்கம்; வாசகர்கள் நிம்மதி

நுாலக கட்டட பராமரிப்பு துவக்கம்; வாசகர்கள் நிம்மதி

அவிநாசி; 'தினமலர்' செய்தி எதிரொலியாக அவிநாசி பேரூராட்சி, பாரதிதாசன் வீதியில், பழுதடைந்திருந்த நுாலகம் கட்டடம் சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.அவிநாசி பேரூராட்சி, 9வது வார்டு பாரதிதாசன் வீதியில், 30 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற ஆசிரியர் சாமிநாதன் தானமாக வழங்கிய நிலத்தில், நுாலக கட்டடம் செயல்பட்டு வருகிறது. பழமையான இந்த நுாலகத்தில் தினமும் ஏராளமான வாசகர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்டோர் வந்து, புத்தகம் படிக்கின்றனர். இந்நிலையில், இக்கட்டடத்தின் மேற்கூரை உள்ளிட்டவை பழுதாகியிருந்தது. இதனால், வாசகர்கள் அச்சத்துடன் அமர்ந்தே புத்தகங்களை படித்தனர். இது குறித்த செய்தி, 'தினமலர்' திருப்பூர் பக்கத்தில் படத்துடன் செய்தி பிரசுரமானது.'நுாலகத்தை பராமரிக்க வேண்டும்,' என, அவிநாசி நல்லது நண்பர்கள் அறக்கட்டளை சார்பில், கலெக்டர், நுாலகத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மனு வழங்கப்பட்டது. அத்துடன், தனியார் நிறுவனத்தினரின் நன்கொடை வாயிலாக, நுாலக கட்டடத்தை பராமரிக்கவும் முயற்சி மேற்கொண்டனர். அதன் விளைவாக, எஸ்.எம்.பி., மைதா மாவு நிறுவனத்தினர், 3.5 லட்சம் செலவில் நுாலக கட்டடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள முன் வந்த நிலையில், பணிகள் துவங்கியது. இதனால், வாசகர்கள் நிம்மதியடைந்தனர்.

நுாலக வரி எங்கே செல்கிறது?

இது குறித்து, அவிநாசியில் இயங்கும், நல்லது நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ரவிக்குமார் கூறியதாவது:கடந்த, 5 ஆண்டாக நுாலக வரி, நுாலகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதாக தெரியவில்லை. நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்களும் போதியளவில் வாங்கியதாக தெரியவில்லை. அதன் விளைவு தான், நகர, கிராமப்புறங்களில் உள்ள நுாலகங்களின் பராமரிப்பில் தொய்வு நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை