அடியார்களுக்கு ஓடி வந்து உதவுபவர் சிவபெருமான்
திருப்பூர்; 'தன்னை வழிபடுவோருக்கு, எந்த தருணத்திலும் ஓடோடி வந்து உதவி செய்பவர் சிவபெருமான்' என, சைவ சித்தாந்த ஆசிரியர் சிவசண்முகம் பேசினார். கொங்கு மண்ட ஆடல்வல்லான் அறக்கட்டளை மற்றும் சபரி டைமண்ட்ஸ் இணைந்து, திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் வாரந்தோறும், செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. நேற்றைய சொற்பொழிவில், சித்தாந்த ஆசிரியர் சிவசண்முகம் பேசியதாவது: மாணிக்கவாசகர், திருப்பெருந்துறையிலிருந்து, பல தலங்களை வழிபட்டுவிட்டு, நிறைவாக சிதம்பரம் வந்தார்; அங்கு பல பதிகங்கள் பாடினார். தில்லையை சேர்ந்த முனிவர் ஒருவர், இலங்கை சென்றுள்ளார். அவர் செல்லும் இடமெல்லாம், 'திரு அம்பலம்' என்று சொல்லிக்கொண்டிருந்தார். இதனைக்கேட்ட இலங்கை மன்னனும், புத்த மத குருவும், திரு அம்பலம் என்றால் என்ன என்று கேட்டனர். அதற்கு அந்த முனிவர், தில்லை தலம் என்று பதிலளித்தார். இந்த உலகின் நடு நாயகம் கனகசபை. சிதம்பரம்தான் பூமியின் மையப்பகுதி என்று அறிவியல் கண்டுபிடித்துள்ளது. கடவுள் மாமுனிவரோ, அன்றே, திருவாதவூரடிகள் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். புத்தரே கடவுள் என நிரூபிப்பதாக கூறி, இலங்கையிலிருந்து மன்னனும், புத்த மத குருவும், தில்லைக்கு வந்தனர். இதை பார்த்த தில்லை வாழ் சைவர்களும், கோவில்களில் பூஜை செய்வோர், மக்கள் அனைவரும் கலக்கமுற்றனர். புத்த குருவோ, 'புராணங்கள், ஆகமங்கள், வேதங்கள் என எதன்வாயிலாக நிரூபணம் செய்ய முயன்றாலும், புத்தரே யாவருக்கும் கடவுள்,' என்றார். துன்பம் வரும்போது, ஓடோடி வந்து துயர் துடைக்கும் எம்பெருமான் சிவபெருமான். அனைவரின் கனவிலும் தோன்றிய சிவபெருமான், 'மாணிக்க வாசகரை அழைத்து வாருங்கள்; அவன் தர்க்க ரீதியாக வாதாடுவான்; புத்தமதத்தை மறுப்பான்' என்று சொன்னார். இதனைடுத்து, அனைவரும், மாணிக்கவாசகரை அழைத்து வந்தனர். தன்னை வழிபடும் அடியாருக்கு, எந்த தருணத்திலும் உடனடியாக வந்து உதவுபவர், சிவபெருமான். தினமும், 21 ஆயிரத்து 600 முறை, 'நமசிவாய' நாமத்தை சொல்லவேண்டும். தினமும், நாம் 21 ஆயிரத்து 600 முறை நாம் சுவாசிக்கிறோம். அப்படியென்றால், நாம் மூச்சுக்காற்றே 'நமசிவாய' மந்திரமாக இருக்கவேண்டும். திரு அம்பலம், சிவசிவ என்று சொன்னால், நமச்சிவாய மந்திரத்தை, 21 ஆயிரத்து 600 முறை சொன்னதற்கான பலனுண்டு. ஆகவே நாம் அனைவரும் சிவசிவ, திரு அம்பலம் என சொல்லி, எல்லா துயர்களிலிருந்தும் வெளிவரவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.