மரங்களை வீழ்த்தும் ஆணிகள்! நடவடிக்கை எடுப்பது அவசியம்
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதிகளில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டோரங்களில், ஆயிரக்கணக்கான மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.பசுமையாக உள்ள இம்மரங்களில், ஆணி அடித்து, அதில் விளம்பர அட்டைகளை தொங்க விடுவது அதிகரித்துள்ளது.குறிப்பாக, பொள்ளாச்சி ரோடு உடுமலை-தாராபுரம், பல்லடம் ரோடு, திருமூர்த்தி, அமராவதி, செஞ்சேரிமலை உட்பட ரோடுகளில், பராமரிக்கப்பட்டு வரும் மரங்களில் விளம்பர அட்டைகள் அதிகளவு ஆணியடித்து தொங்க விடப்படுகின்றன.இதனால், மரங்களின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், நோய்த்தாக்குதல் ஏற்பட்டு மரங்கள் கருகும் அபாயமும் உள்ளது. மரங்களை பாதுகாக்க தன்னார்வலர்கள், ஆணிகளை அகற்றுகின்றனர். இருப்பினும், ஆணி அடிப்பது தொடர்கதையாக உள்ளது.இது குறித்து, நெடுஞ்சாலைத்துறையினர் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு, விதிமுறைகளை மீறி, விளம்பர அட்டைகளை தொங்க விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.