உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பருவமழையை சாதகமாக்கும் முறைகேடு நிறுவனங்கள்

பருவமழையை சாதகமாக்கும் முறைகேடு நிறுவனங்கள்

திருப்பூர்: வடகிழக்கு பருவம் துவங்கியுள்ளதால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பருவமழை துவங்கி பெய்துவருகிறது. இதனால், திருப்பூரில் நேற்று, நொய்யலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இது, முறைகேடாக இயங்கும் சாய ஆலை, பிரின்டிங் நிறுவனத்தினருக்கு, பருவமழையால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்ததை சாதகமாக பயன்படுத்தி, சாயம், பிரின்டிங் கழிவுநீரை திறந்துவிட துவங்கி விட்டனர். ஆற்றில், குறைந்தளவு தண்ணீர் செல்லும்போது சாயத்தை விட்டால் பளிச்சென்று தெரிந்து விடும்; மிக சுலபமாக மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்ள நேரிடும். ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது சாயத்தை திறந்துவிட்டால், சாயம் கலந்தது எளிதில் தெரியாது என்பதுதான் இதற்கு காரணம். இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. பூஜைக்கு தயாராகும் வகையில், கடந்த இரண்டு நாட்களாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில், சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றுவந்தன. சில பிரின்டிங் நிறுவனங்கள், சுத்தம் செய்யும்போது வெளியேறும் சாயக்கழிவுநீரை, அருகாமையில் உள்ள சாக்கடை கால்வாயிலேயே திறந்து விடுகின்றன.நேற்றுமுன்தினம் மந்திரி வாய்க்காலில் கலந்துவந்த பிரின்டிங் கழிவுநீர், நொய்யலாற்றில் கலந்தது. நேற்றும், மாலை நேரம், ஈஸ்வரன் கோவில் தரைப்பாலம் அருகே, ஆற்றில், பிரின்டிங் கழிவுநீர், ஆற்றுநீருடன் கலந்து பாய்ந்தோடியது.---------தனிப்படம்---தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இடம்: அணைமேடு தடுப்பணை.---திருப்பூர், ஈஸ்வரன் கோவில் பாலத்தின் கீழ் நொய்யல் ஆற்றில் ஆலை கழிவு நீர் ஓடியது.

மாசுக்கட்டுப்பாடு வாரியம் கண்காணிப்பு

விதிமீறல் சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த வாரத்தில் மட்டும் இரண்டு பிரின்டிங் நிறுவனங்கள் சிக்கியுள்ளன. சின்னக்கரை பொதுசுத்திகரிப்பு மையம் அருகே, தனியார் சுத்திகரிப்பு மையத்துடன் கூடிய ஸ்கை நிட் பிரின்டிங் நிறுவனம், கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல், நிலத்தில் தேக்கிவைத்திருந்தது.அதேபோல், முருகம்பாளையத்தில் நிம்பஸ் என்கிற பிரின்டிங் நிறுவனமும் சிக்கியது. இவ்விரு நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக நொய்யலாற்றில் பிரின்டிங் கழிவுநீர் கலப்பது குறித்து, மாசுகட்டுப்பாடு வாரிய குழுவினர் ஆய்வு நடத்திவருகின்றனர். குறிப்பாக மந்திரி வாய்க்கால் பகுதியை தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். முறைகேடு நிறுவனத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.- செந்தில்குமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ