போலி ஆதார் கார்டு சப்ளை பல்லடம் நபர் சிக்கினார்
திருப்பூர்:திருப்பூர், வெங்கமேடு, வீரபாண்டி ஆகிய இடங்களில், உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த தன்வீர் அகமது, 26, அவரது மனைவி சொஹாகி, 23, மற்றும் நண்பர் அஹமது மம்மூஸ், 25, ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.கைது செய்யப்பட்டுள்ள, மூன்று பேரில், தன்வீர் அகமது மற்றும் அஹமது மம்மூஸ் நண்பர்கள். கடந்த, 2022ல் வங்கதேச தலைநகர், டாக்காவில் உள்ள மாமா வீட்டில், 90,000 ரூபாய், 3 சவரன் நகையைத் திருடி, அங்கிருந்து தப்பித்தனர்.இவர்களின் திருட்டு குற்றத்தை பார்த்த தன்வீர் அகமதுவின் தந்தையின் தங்கை கணவரை கொன்றனர். அங்கிருந்து இந்தியாவுக்கு வந்து, வட மாநிலத்தினர் போர்வையில் பல இடங்களில் வேலை செய்து வந்தனர்.கடந்த, நான்கு மாதத்திற்கு முன், ஏஜன்ட் வாயிலாக, 30,000 ரூபாய் கொடுத்து, அசாம் மாநிலம் வழியாக மனைவி, 3 வயது குழந்தையை தன்வீர் அகமது திருப்பூருக்கு அழைத்து வந்து குடியேறியது தெரிந்தது.இவர்களுக்கு, போலி ஆதார் அடையாள அட்டை வழங்கிய, பல்லடத்தைச் சேர்ந்த மாரிமுத்து, 42, என்பவர், அதற்காக மூவரிடம் தலா, 7,000 ரூபாய் பெற்றார். புரோக்கரான மாரிமுத்துவிடம் விசாரித்தபோது, வங்கதேசத்தினர் என்று தெரியாமல், நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு பெற்றுக் கொடுத்தது தெரிந்தது.அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.