உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 2 மாதமாக சம்பளம் இல்லை மங்கலம் போலீசார் புலம்பல்

2 மாதமாக சம்பளம் இல்லை மங்கலம் போலீசார் புலம்பல்

திருப்பூர் : திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையை விரிவுபடுத்தும் வகையில், மங்கலம் போலீஸ் ஸ்டேஷன், இணைக்கப்பட்டது.மங்கலம் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் - எஸ்.ஐ., - போலீசார் என மொத்தம், 59 பேர் பணியாற்றுகின்றனர். மாநகருடன் இணைக்கும் ஆணை வெளியான பின், மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த மற்ற ஸ்டேஷன்களுக்கும், அந்த ஸ்டேஷனில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் இடமாற்றத்தில் வந்தனர். நிர்வாக ரீதியான இடமாற்றத்துக்கு பின், அவர்களுக்கு சம்பளம் பட்டுவாடா மாநகர போலீசில் இருந்து வழங்கப்படும்.இதற்கான ஐ.டி., இன்னும் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. இதனால், கடந்த, இரு மாதமாக மங்கலம் ஸ்டேஷனை சேர்ந்த, 45 போலீசாருக்கு இன்னமும் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், மாதந்தோறும் வீட்டு வாடகை, வீட்டு கடன், குடும்ப செலவு போன்ற பல செலவுகளை சமாளிக்க முடியாமல் போலீசார் திக்குமுக்காடி வருகின்றனர். உடனடியாக கமிஷனர் இப்பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போலீசார் எதிர்பார்ப்பாக உள்ளது.போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜனிடம் கேட்டதற்கு, ''இதற்கு முன்பு மாவட்ட கட்டுப்பாட்டில் இருந்த ஸ்டேஷன் மாநகருடன் இணைக்கப்பட்டது. நிர்வாக ரீதியாக சம்பந்தப்பட்ட போலீசாருக்கு மாநகரம் மூலமாக சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதற்கான சம்பள ஐ.டி., கோர்டு மாற்றம் செய்வதற்கான கடிதம் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஐ.டி., மாற்றப்பட்ட உடன், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்,ஓரிரண்டு நாட்களில் தீர்வு கிடைத்து விடும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ