மாங்காய் கொள்முதல் விலை சரிவு; கேரள வியாபாரிகள் வருகை குறைவு
உடுமலை; கேரளா வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால், உடுமலை சந்தையில், மாங்காய்களுக்கு போதிய விலை கிடைக்காமல், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.உடுமலை மானுப்பட்டி, ஜல்லிபட்டி, ஆண்டியூர், தேவனுார்புதுார், கொழுமம் உள்ளிட்ட பகுதிகளில், மா சாகுபடி அதிகளவு உள்ளது.வழக்கமாக கோடை சீசனில் அறுவடை செய்யப்படும் மாங்காய்களுக்கு நல்ல விலை கிடைக்கும். வியாபாரிகள் நேரடியாக தோப்புகளிலும் கொள்முதல் செய்வது வழக்கம்.இந்தாண்டு கோடை வெப்பத்தின் தாக்கம் முன்னதாகவே துவங்கினாலும், மாங்காய் அறுவடை தாமதமானது. பிற மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட மாங்காய்களே உடுமலை பகுதியில் விற்பனையாகி வந்தது. இந்நிலையில், தாமதமாக உடுமலை வட்டாரத்தில், மாங்காய் அறுவடை துவங்கியுள்ளது.ஆனால், முன்னதாகவே துவங்கிய பருவமழையால் விற்பனை பாதித்துள்ளது. தொடர் மழை காரணமாக, கேரளா மூணாறு, மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் மாங்காய் கொள்முதலுக்கு வரவில்லை.நேற்று உடுமலை தினசரி சந்தையில், அனைத்து ரக மாங்காய்களுக்கும் அதிகபட்சமாக கிலோ 10 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைத்தது. முக்கிய சீசனில் மாங்காய்களுக்கு போதிய விலை கிடைக்காதது, விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.