திருப்பூர்; திருப்பூருக்கு வேலை தேடி வரும் மக்களிடம் 'மேன் பவர்' நிறுவனத்தை சேர்ந்த சிலர் அத்துமீறல், பணம் மோசடிகளில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.தொழிலாளர் நகரமான திருப்பூரில் வெளி மாவட்ட, மாநிலத்தை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன், தனியாகவும் தங்கி, பனியன் நிறுவனம், அதை சார்ந்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூருக்கு சென்றால், ஏதாவது ஒரு வேலையை செய்து வாழ்க்கையை நடத்தி விடலாம் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர்.அவ்வாறு வேலை தேடி வருவோருக்கு, 'வேலை வாங்கி தருகிறேன்,' என்ற பெயரில் ஏராளமான 'மேன் பவர்' நிறுவனங்கள் உருவாகி விட்டன. மத்திய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட மாநகரில் பல இடங்களில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.சமீப காலமாக, 'மேன் பவர்' நிறுவனங்களுக்கு வேலை தேடி வருபவர்களிடம் பணம் பறிப்பது, பெண்களிடம் அத்துமீறுவது போன்ற குற்றங்கள் நடக்கின்றன.வேலை வாங்கி தரும் நிறுவனங்கள் முறையாக செயல்படுகிறதா, விதிமீறல்களில் ஈடுபடுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் துறையினரும் கண்காணிக்க வேண்டும். ஆனால், அவர்கள் கண்காணிக்க தவறியதன் விளைவாக, வேலை தேடி வருபவர்கள் மோசடி ஆசாமிகளிடம் சிக்கி கொள்கின்றனர். தொடரும் குற்றங்கள்
கடந்த இரு வாரம் முன்பு, வேலை தேடி சென்ற பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக காரில் கடத்தி சென்று, நகையை பறிக்க திட்டமிட்டனர். அந்த பெண் காருக்குள் கூச்சலிட்டார். பயந்து போன அவர்கள் அப்பெண்ணை ரோட்டில் தள்ளி விட்டு சென்றனர். காயமடைந்த பெண்ணின் புகாரையடுத்து, போலீசார் இருவரை கைது செய்து காரை மீட்டனர்.நேற்று முன்தினம் மத்திய பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள மேன் பவர் நிறுவனத்துக்கு வேலை தேடி வந்த கேரளாவை சேர்ந்த, 19 வயது இளம் பெண்ணை வாலிபர், பெருமாநல்லுாருக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட வாலிபரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.எனவே, 'வந்தாரை வாழ வைக்கும்' பேர் கொண்ட திருப்பூரில், இதுபோன்ற சில ஆசாமிகளில், ஒட்டுமொத்த திருப்பூருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, 'மேன் பவர்' நிறுவனங்களின் நடவடிக்கையை ஒழுங்குபடுத்தி, ஒரு வரையறைக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: திருப்பூருக்கு வேலை தேடி பல இடங்களில் இளம் வயதை சேர்ந்த, இருபாலரும் வருகின்றனர். சிலர் அதிக கமிஷனை வாங்கி கொண்டு, பெயருக்கு ஏதாவது இடத்தில் சேர்த்து விடுகின்றனர். சிலர் பணத்தை பறித்து கொண்டு அலைய விடுகின்றனர். பெண்களிடம் அத்துமீறல் போன்ற சம்பவம் நடக்கிறது. திருப்பூர் மாநகரம், புறநகர பகுதியில் இயங்கும் 'மேன் பவர்' நிறுவனங்கள் முறையாக பதிவு செய்து இயங்குகின்றதா, விதிமீறல்கள் உள்ளதா என்பதை போலீசார், மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.