உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பராமரிப்பின்றி புதரில் மறைந்த சந்தை ; ஒன்றிய நிர்வாகம் அலட்சியம்

பராமரிப்பின்றி புதரில் மறைந்த சந்தை ; ஒன்றிய நிர்வாகம் அலட்சியம்

உடுமலை; வாரச்சந்தை புதர் மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது குறித்து, பல முறை கோரிக்கை விடுத்தும், குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், பல கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.கிராம மக்கள் மளிகை, காய்கறி உட்பட பல்வேறு பொருட்களை மொத்தமாக வாங்குவதற்கு முக்கிய ஊர்களில் செயல்படும் சந்தைகளை பயன்படுத்தி வருகின்றனர்.அவ்வகையில், குடிமங்கலம் ஒன்றியத்தில், பூளவாடி, ராமச்சந்திராபுரத்தில், ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், வாரச்சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், பூளவாடி சந்தை நீண்ட இழுபறிக்குப்பிறகு மேம்படுத்தப்பட்டு, புதிதாக கடைகள் கட்டி தரப்பட்டன.ஆனால், அனிக்கடவு ஊராட்சிக்குட்பட்ட ராமச்சந்திராபுரத்தில் உள்ள, வாரச்சந்தை வளாகம் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி, பரிதாப நிலையில் உள்ளது.இச்சந்தையை அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், கரியன்சாளை, விருகல்பட்டி உட்பட பல கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்; விவசாயிகளும், தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்தி வந்தனர்.வாரத்தில், ஒரு நாள் மட்டும் சந்தை செயல்பாட்டில் இருப்பதால், பிற நாட்களில், வளாகத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்; சமூகவிரோதிகளால், கடைகளுக்கான கட்டமைப்பும் சேதப்படுத்தப்பட்டது.கடந்த, 2015ல், ஒன்றிய பொதுநிதியின் கீழ் சந்தை மேம்படுத்தப்பட்டு, மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, உட்பகுதியில், புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியாமல், விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.இதை சரிசெய்ய வேண்டும் என கிராம மக்கள், பல நாட்களாக ஊராட்சிக்கும், ஒன்றிய நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மேலும்,இப்பிரச்னைக்கு தீர்வாக, வாரச்சந்தை கடைகளை புதுப்பித்து, இரவு நேர காவலரை நியமித்தால், சமூக விரோத செயல்களை, கட்டுப்படுத்த முடியும்.பல கிராம மக்கள் பயன்பெறும் வகையில், இப்பணிகளை, குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை