ஆலையில் அளவீடு பணி; மக்களை தடுத்த போலீசார்
பல்லடம் : அனுப்பட்டியில் உள்ள இரும்பு உருக்கு ஆலையால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி, இப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.உருக்கு ஆலையின் கட்டடத்தை அளவீடு செய்ய வேண்டும் என, ஊராட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு, கோர்ட் ஒப்புதல் அளித்த நிலையில், அளவீடு பணிக்காக, ஊராட்சித் தலைவருடன், பொதுமக்கள் சிலரும் நேற்று ஆலைக்கு சென்றனர்.தகவல் அறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார், பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். மேலும், 'அரசு தரப்பிலான நில அளவையரை அழைத்து வாருங்கள். தனியார் அளவையரை அனுமதிக்க முடியாது' என போலீசார் கூறினர். நீண்ட நேர பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகத்தினர் மட்டும் அளவீடு செய்ய உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.ஊராட்சி தலைவர் ஜெயகுமார் கூறுகையில், ''2011ல், 69 சென்ட் இடத்தில் கட்டடம் கட்ட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, விரிவாக்கம் செய்தது உறுதி செய்யப்பட்டது. 'டிடிசிபி' அனுமதி பெற்றுத்தான் கட்டியுள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவிக்கிறது.முறைப்படி ஆய்வு நடத்தி, முறைகேடாக கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றுவோம்,'' என்றார்.