இணைப்பு ரோட்டில் மெகா குழிகள்
உடுமலை: அமராவதி அணையிலிருந்து கல்லாபுரம் செல்லும் இணைப்பு ரோடு, குண்டும், குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி விட்டது. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, சுற்றுலா தலமாக உள்ளது. அணைக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. அதே வேளையில் அணையில் இருந்து கல்லாபுரம் கிராம இணைப்பு ரோட்டையும், பல கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதி மக்கள் அமராவதி நகர் சுகாதார நிலையத்துக்கு வர இந்த ரோட்டையே உபயோகிக்கின்றனர். இணைப்பு ரோட்டில் வனத்துறையின் முதலை பண்ணையும் அமைந்துள்ளது. இந்த ரோடு முறையான பராமரிப்பு இல்லாமல் பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறி விட்டது. குறிப்பாக, அணை பூங்காவை கடந்து செல்லும் வரை, மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதர வாகன போக்குவரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் அமராவதி அணை முதல் கல்லாபுரம் வரை, ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.