தாராபுரம், உடுமலையில் மினி மைதானம்?
திருப்பூர், : தாராபுரம் மற்றும் உடுமலையில், மினி மைதானம் அமைக்க இட வசதி உள்ளதாக கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், மாநிலம் முழுதும், 25 இடங்களில் மினி விளையாட்டு மைதானம் நடப்பாண்டில் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு அரங்குக்கும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 400 மீ., தடகள ஓடுபாதை, திறந்தவெளி கூடைப்பந்து, வாலிபால், நீளம் தாண்டுதல் பாதை, பார்வையாளர் மாடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் மினி விளையாட்டு மைதானம் உள்ளது. தாராபுரம், உடுமலையில் மினி மைதானம் அமைக்க இடவசதி உள்ளதாக கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் கூறுகையில், ''தாராபுரம் பை-பாஸ் சாலையில், ஐ.டி.ஐ., அருகே போதிய இடவசதி உள்ளது. உடுமலையில் அரசு கல்லுாரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, கல்பனா மைதானம் என இரு இடங்கள் ஆராயப்பட்டுள்ளது. இவற்றின் விரிவான நிலை குறித்து விளையாட்டுத்துறைக்கு அறிக்கை அனுப்பபட்டுள்ளது. நடப்பாண்டு தாராபுரத்துக்கு ஒப்புதல் கிடைத்து விடும்; அடுத்த சில மாதங்களில், உடுமலையில் மினி மைதானத்துக்கும் ஒப்புதல் கிடைக்கலாம்,' என்றார்.
இடம் கண்டறிவதில் சிக்கல்
மினி மைதானம் அமைக்க இடம் தேடி கண்டறிவது விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. வருவாய், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிறைய இடங்கள் உள்ளன. அவற்றில், போட்டிகள் நடத்த, வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்ற, புவியியல் தகவமைப்புடன் கூடிய இடங்களை தேர்வு செய்யும் போது, வழக்கு நிலுவை, இடத்துக்கான முழுமையான விபரம் இல்லாததது என்பன உள்ளிட்ட நிறைய நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன. இதனால், இடம் தேர்வு செய்வது காலதாமதமாகிறது. மாவட்ட அளவில் தனிக்குழு அமைத்தால் இடம் தேர்வு செய்வதில் உள்ள சிக்கல்கள் களையப்பட வாய்ப்புள்ளது.