கிராமத்தில் குரங்குகள் உலா!
உடுமலை : தேவனுார்புதுார் கிராமத்தில், வலம் வரும் குரங்குகள், மனிதர்களை தாக்குவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்; வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை அருகேயுள்ள தேவனுார்புதுாரில், கடந்த சில நாட்களாக இரு குரங்குகள் வலம் வருகிறது. அங்குள்ள மொபைல்போன் டவரில் தஞ்சமடையும் குரங்குகள், பகலில் வீடுகளிலும், கடைகளிலும் புகுந்து மக்களை அச்சுறுத்துகின்றன.உணவு பொருட்களை எடுப்பதுடன், மனிதர்களையும் தாக்கி வருகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இயல்பான வனச்சூழலில் இருந்து வெளியேறியுள்ள குரங்குகள், குடியிருப்பு பகுதியில் பதட்டத்துடன் சுற்றி வருகின்றன. வனத்துறையினர் குரங்குகளை பிடித்து, வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.