மல்பெரி தோட்டங்களில் பராமரிப்பு: விலையை எதிர்பார்த்து தீவிரம்
உடுமலை: வரும் சீசனில், வெண்பட்டுக்கூடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், மல்பெரி தோட்ட பராமரிப்பு பணிகளை உடுமலை வட்டார விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில் உடுமலை பகுதி முன்னிலையில் உள்ளது. சுற்றுப்பகுதிகளில், 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மல்பெரி சாகுபடி செய்து, புழு வளர்ப்பு மனைகளில், வெண்பட்டுக்கூடு உற்பத்தியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் பட்டுக்கூடுகள், உடுமலை, கோவை, சேலம் உள்ளிட்ட மாநில அரசின் கொள்முதல் மையங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த வாரம், தர்மபுரி மையத்தில், வெண்பட்டுக்கூடு கிலோவுக்கு, அதிகபட்சமாக 742 ரூபாயும், குறைந்பட்சமாக ராசிபுரம் மையத்தில் கிலோவுக்கு, 403 ரூபாயும் விலை கிடைத்தது. வரும் சீசனில் தேவை அதிகரித்து, வெண்பட்டுக்கூடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். பருவமழை பெய்து வரும் நிலையில், மல்பெரி தோட்ட பராமரிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். தரமான வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு, தரமான மல்பெரி இலைகளே ஆதாரமாக உள்ளது. எனவே, செடிகளுக்கு உரமிடுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.