முருக பக்தர் மாநாடு பெரும் வெற்றி
திருப்பூர்; மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதாக, ஹிந்து முன்னணி பெரு மிதம் அடைந்துள்ளது.இதுகுறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு மிகச்சிறப்பாக நடந்தது. மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க எத்தனை இடையூறு, பிரச்னை, எதிர்மறை விமர்சனம், சட்ட பிரச்னைகளை எழுப்பிய போதும், அதனைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் தொடர்ந்து மக்களை சந்தித்து அழைப்பிதழ் தந்து வரவேற்றும், மாநாட்டு திடலிலும் இரவு பகல் பாராது ஹிந்து இயக்க தொண்டர்கள் உழைத்தனர்.ஹிந்து முன்னணி வக்கீல்கள் சட்டரீதியாக போராடி தடைகள் நீங்க பாடுபட்டனர். அனைத்து சம்பிரதாயங்களை சேர்ந்த போற்றுதலுக்குரிய, 380 துறவியர், மாநாட்டில் எழுந்தருளி ஆசி வழங்கினர்.அழைப்பை ஏற்று வருகை தந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ., தலைவர், ஆர்.எஸ்.எஸ்., தலைவர், துணை அமைப்பு பொறுப்பாளர்கள், சமுதாய தலைவர்கள், ஆன்மிக குழுவினர், த.மா.கா., தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு தலைவர்கள் பங்கேற்றனர்.ஆறுபடை முருகன் அருட்காட்சியை தரிசிக்க வந்து சிறப்பு சேர்த்த கவர்னர் மற்றும் மத்திய அமைச்சர், திரையுலக பிரபலங்கள், கவுரமார மடாலயம் சுவாமி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கு ஹிந்து முன்னணி சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.பலவித சிரமங்களிடையே உற்சாகமாக பங்கேற்று சிறப்பித்த லட்சோப லட்சம் ஹிந்து குடும்ப சொந்தங்களின் பாசத்தை மறக்க மாட்டோம்.இத்தகையை மாபெரும் நிகழ்ச்சி மிக நேர்த்தியாக எழுச்சியுடன், கட்டுப்பாடு, ஒழுங்கு பிரமிக்க வைத்துள்ளது. இத்தகையை பண்பாடுகள் ஒவ்வொரு பக்தரின் உள்ளத்தில் இருந்து வெளிப்பட்டது.இதற்கு முழு முதல் காரணம் ஹிந்துக்களிடம் இருக்கும் ஆழ்ந்த பக்தி சிரத்தை, அந்த பக்தியின் ஒருங்கிணைந்த சக்தியாக வெளிப்பாடாகியுள்ளது. தமிழகத்தின் திருப்புமுனையாக ஹிந்து முருக பக்தர்கள் மாநாடு அமைந்தது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.