மர்ம மூட்டைகள்; விவசாயிகள் அச்சம்
பல்லடம்; பல்லடம் அடுத்த, கரைப்புதுார் ஊராட்சி, அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியம், 61; விவசாயி. இரண்டு ஏக்கர் நிலத்தில், 40 அடி ஆழ விவசாயக் கிணறு உள்ளது. கடந்த, 10ம் தேதி இரவு, இவ்வழியாக வந்த ஆட்டோவில் இருந்து, சில மூட்டைகள் கிணற்றுக்குள் வீசப்பட்டன. வெங்கடசுப்பிரமணியம் கூறுகையில், 'சரக்கு ஆட்டோ ஒன்றில் இருந்து, சில மூட்டைகளை இழுத்து சென்று கிணற்றுக்குள் வீசிவிட்டு ஆட்டோ கிளம்பி சென்றதாக, இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கூறினர்' என்றார். விவசாயிகள் கூறுகையில், 'இரவு நேரத்தில் மர்மமான முறையில், கிணற்றுக்குள் மூட்டைகளை வீசி சென்றதால், அது பல்வேறு சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்புகிறது. குப்பைகள், கழிவுகளாக இருந்தால், அவை, தண்ணீரில் மிதந்திருக்கும். ஆனால், வீசப்பட்ட மூட்டைகள், தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்று கருதப்படுவதால், இது மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது. அலட்சியம் காட்டாமல், மூட்டைகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு, அச்சத்தை போக்க வேண்டும்' என்றனர்.