தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம்
திருப்பூர் : திருப்பூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்ரி அறிக்கை:கடந்த மாதம் நடத்தப்பட்ட கூட்டாய்வுகளில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடைகளில் தராசு முத்திரை உள்ளிட்டவை குறித்தும், பேக்கிங் மீது தேதி குறிப்பிடாதது, கூடுதல் விலை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டறிந்து 94 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.குறைந்தபட்சம் கூலி வழங்காத ஐந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒப்பந்த தொழிலாளர்கள் பணியமர்த்தினாலும், வெளி மாநிலத்தவரை பணியமர்த்தினாலும் உரிய பதிவு செய்ய வேண்டும்.நிறுவனங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மையம், புகார் குழு, மாற்றுத்திறனா ளிகளுக்கு ஒதுக்கீடு, பெரிய நிறுவனங்களில் மருத்துவ வசதி, குடிநீர் வசதி, ஓய்வறை, இருக்கை வசதி, இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., பிடித்தம் போன்றவை பின்பற்ற வேண்டும்.நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை அமைக்க வேண்டும். தகவல் பலகையில் தினமும் ஒரு திருக்குறள் விளக்கத்துடன் எழுதப்பட வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர் விவரங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.அரசு இணையதளத்தில் பதிவு செய்யாமல் வெளி மாநில தொழிலாளர்கள் பணியமர்த்தக் கூடாது. குழந்தை மற்றும் வளர் இளம் தொழிலாளர்கள் குறித்த ஆய்வில் இரு நிறுவனங்கள் மீது அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.