உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய கால்நடை இயக்கத்தின் மானியம்; தமிழக சிறு, குறு விவசாயிகளுக்கு சிக்கல்

தேசிய கால்நடை இயக்கத்தின் மானியம்; தமிழக சிறு, குறு விவசாயிகளுக்கு சிக்கல்

உடுமலை,; தேசிய கால்நடை இயக்கத்தின் மானிய திட்டத்தில், தமிழகத்திலுள்ள சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், திட்ட விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என, பாரதீய கிசான் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு உள்ளது.சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசு, ஆடு, கோழி வளர்ப்பு மற்றும் தீவனத்துறையில், தொழில் முனைவோர் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை உள்ளடக்கி, தேசிய கால்நடை இயக்கத்தை கடந்த, 2021ல் துவக்கியது.திட்டத்தின் கீழ் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஆடு வளர்ப்புக்கு, ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக, 50 லட்சம் ரூபாய் வரை மானியம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.ஆனால், இத்திட்டங்களில் தமிழகத்தைச்சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் பயன்பெற முடியாத அளவுக்கு, விதிமுறைகள் அமைந்துள்ளது என, விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.திட்டத்தின்படி, குறைந்தபட்சம், 100 ஆடுகள் மற்றும் 5 கிடாய்களை விவசாயிகள் பராமரிக்க வேண்டும்.இந்த விதிமுறை அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, பாரதீய கிசான் சங்கம் திருப்பூர் மாவட்டம் சார்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள மனு: தேசிய கால்நடை இயக்கம், பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியது. இதில், ஆடு வளர்ப்பு திட்ட மானியத்தில், விவசாயிகள் பயன்பெற முடியாத நிலை உள்ளது.தமிழகத்தில், 5 ஏக்கருக்கும் குறைவாக வைத்துள்ள, சிறு, குறு விவசாயிகள், 73 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளனர்.தேசிய கால்நடை இயக்க விதிகளின்படி, சிறு, குறு விவசாயிகள், 105ஆடுகள் வரை பராமரிக்க இட வசதியிருக்காது; தீவனம் வளர்ப்பதிலும் சிக்கல் உள்ளது.அதிக பரப்புள்ள மேய்ச்சல் நிலங்களும் தமிழகத்தில் இல்லை. இதனால், மானியத்துக்காக இணையதளத்தில் விண்ணப்பிக்கவும் முடியவில்லை.முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தில், பராமரிக்கும் ஆடுகளின் எண்ணிக்கையை குறைப்பதன் வாயிலாக, கால்நடை வளர்ப்போரை, தொழில் முனைவோராக மாற்றும் மத்திய அரசின் நோக்கம் நிறைவேறும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பிரச்னையில், மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை