7 மையங்களில் நாளை நீட் தேர்வு
திருப்பூர்; மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு, மாவட்டத்தில் ஏழு மையங்களில், நாளை மதியம் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், 3,212 பேர் தேர்வெழுத உள்ளனர்.மருத்துவ கல்லுாரிகளில் பயில, நடப்பாண்டுக்கான 'நீட்' தேர்வு நாளை (4ம் தேதி) நடக்கிறது. இத்தேர்வெழுத பிப்., 4 முதல் மார்ச், 7 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. விண்ணப்பித்தவர்களுக்கு, நாளை மதியம், 2:00 முதல் மாலை 5:00 மணி வரை 'நீட்' தேர்வு நடக்கிறது. திருப்பூர் ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரியில் இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.முதல் மையத்தில், 360 பேரும், இரண்டாவது மையத்தில், 354 பேரும் தேர்வெழுதுகின்றனர். அதிகபட்சமாக பெருமாநல்லுார், கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில், 720 பேரும், குறைந்தபட்சமாக, கூலிபாளையம் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், 218 பேரும் தேர்வெழுத உள்ளனர். உடுமலை, அமராவதிநகர், சைனிக் பள்ளி மற்றும், பல்லடம், அரசு கலைக்கல்லுாரியில் தலா, 480 பேர் தேர்வெழுதுகின்றனர். சோளிபாளையம் லிட்டில் கிங்டம் பள்ளியில், 600 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் மொத்தம், ஏழு மையங்களில், 3,212 பேர் தேர்வெழுத உள்ளனர்.'நீட்' தேர்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், தேர்வு நடக்கும் மையங்களுக்கு அருகில், இன்றும், நாளையும் மின்தடை ஏற்படுத்தக்கூடாது என மின்வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் வருகைக்கு ஏற்ப சிறப்பு பஸ்களை இயக்கவும், மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை மூலம் ஒவ்வொரு மையத்திலும் ஒரு மருத்துவ நிலைக்குழு, பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசல், வேறு சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும், என மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடுமலை, கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகத்துக்கு, திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வை ஒருங்கிணைந்து நடத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வாழ்த்து
'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கு, மாவட்டத்தின் எட்டு மையங்களில் ஏப்ரல், 1 ம் தேதி முதல் நேற்று வரை நீட் தேர்வுக்கான பயிற்சி பள்ளி கல்வித்துறையால் வழங்கப்பட்டது. ஒரு மாதம் பயிற்சியில் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு, பாடம் கற்பித்த ஆசிரியர்கள், தேர்வு குறித்து வழிகாட்டுதல்களை தெரிவித்து, நேற்று மாலை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.