உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  களப்பணியில் அசட்டை

 களப்பணியில் அசட்டை

திருப்பூர்: திருப்பூரில், பி.எல்.ஓ.,க்கள் பலர், வாக்காளர்களின் வீதி பக்கம் கூட எட்டிப்பார்ப்பதில்லை; பொது இடங்களில் அமர்ந்து கொண்டு, தீவிர திருத்த படிவங்களை வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. போலி, இரட்டைப்பதிவு வாக்காளர், இறந்த வாக்காளரை நீக்கி, செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும்வகையில், இந்திய தேர்தல் கமிஷன், எஸ்.ஐ.ஆர். என்கிற, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில், 4ம் தேதி முதல், வாக்காளர்களுக்கு தீவிர திருத்த படிவம் வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வாக்காளர்களுக்கு வீடு தேடிச் சென்று தீவிர திருத்த படிவம் வழங்கும் பணிகளில், 2,536 பி.எல்.ஓ.,க்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கட்டாயம் வாக்காளர்களின் வீடு தேடிச் சென்று படிவங்களை வழங்கவேண்டும்; வாக்காளர் வீட்டில் இல்லையெனில் மூன்று முறை செல்லவேண்டும் என, பி.எல்.ஓ.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் மாநகராட்சியில் பத்து வார்டுகள், திருப்பூர் ஒன்றியத்தில் மூன்று ஊராட்சிகளை உள்ளடக்கிய பல்லடம் தொகுதியில், பெரும்பாலான வாக்காளர், பின்னலாடை தொழிலாளராகவே உள்ளனர். காலை, 8:00 மணிக்கு வேலைக்குச் செல்வோர், இரவில் தான் வீடு திரும்புகின்றனர். குடும்பம் மற்றும் வேலை சூழல்களுக்கு ஏற்ப, வெவ்வேறு வாடகை வீடுகளுக்கு செல்கின்றனர். இதனால், தொடர் அலைச்சல், படிவங்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால், வாக்காளர்களின் வீடு தேடிச் செல்வது சரிப்பட்டுவராது என, சில பி.எல்.ஓ.,க்கள் பலர் முடிவு செய்து விட்டதாக, வாக்காளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒரே இடத்தில்... இதனால், தேர்தல் நேரத்தில், பூத்சிலிப் வினியோகிப்பதுபோலவே, இப்போதும், தங்கள் பாகத்துக்கு உட்பட்ட வாக்காளர் வசிக்கும் பகுதிகளில், கோவில் உள்ளிட்ட பொது இடங்கள், கடைகளில் பி.எல்.ஓ.க்கள் அமர்ந்துகொண்டு, தீவிர திருத்த படிவங்களை வினியோகிப்பதாக புகார் எழுகிறது. இதுதவிர, அரசியல் கட்சியினர் உதவியுடன், அந்தந்த பகுதி மக்களை உள்ளடக்கி செயல்படும் வாட்ஸ் அப் குழுக்களில், பி.எல்.ஓ.,க்கள் வருகை குறித்த தகவல் பரப்பப்படுகிறது. இதனால், வாக்காளர்கள் தங்கள் அட்டையுடன் பி.எல்.ஓ.,க்களை தேடிச் சென்று, தங்கள் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினருக்கான படிவங்களை வாங்கிச் செல்கின்றனர். சில பி.எல்.ஓ.,க்களோ, படிவத்தை வழங்கும்போதே, 'படிவத்தை ஓரிரு நாட்களுக்குள் பூர்த்தி செய்து கொடுத்தால் நல்லது' என அவசரப்படுத்துகின்றனர். பூர்த்தி செய்த படிவத்தை வழங்குவதற்காக மீண்டும் ஒருமுறை பி.எல்.ஓ., வை தேடிச் செல்லவேண்டும் என்பதால், வாக்காளர் பலர், படிவத்தை பெறும்போதே பூர்த்தி செய்கின்றனர். கடந்த 2002 தீவிர திருத்த பட்டியலில் தங்கள் பெயர் அல்லது உற வினர் பெயர் உள்ளதா; அவ்விவரங்களை தேர்தல் கமிஷனின் தளத்தில் தேடி கண்டுபிடிப்பது எப்படி என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை. எப்படியோ தங்கள் வேலை முடிந்தால் சரி என்கிற அடிப்படையில், பி.எல்.ஓ.,க்கள், வாக்காளர்கள் அரைகுறையாக பூர்த்தி செய்த படிவங்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். முந்தைய தீவிர திருத்த பட்டியல் விவரங்களை பூர்த்தி செய்யாமல் விடுவதால், வரைவு பட்டியலுக்குப்பின்னர், பெரும்பாலான வாக்காளர்கள், வாக்காளர் பதிவு அலுவலரிடம் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி வரும். பி.எல்.ஓ.,க்கள் வீடு தேடி செல்லாததால், இறந்த வாக்காளர், போலி வாக்காளர், இரட்டை பதிவு வாக்காளர்களை அடையாளம் காணமுடியாத நிலை ஏற்படுகிறது. இடம்பெயர்ந்த வாக்காளர்களையும் கண்டறிய முடிவதில்லை. படிவங்களை ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வழங்கும் பி.எல்.ஓ.,க்கள், பூர்த்தி செய்த படிவங்களை சேகரிக்கவாவது, வீடு தேடிச் செல்ல வேண்டும். அப்போதுதான், போலிகள், இரட்டை பதிவு, இறந்த வாக்காளர் களையப்பட்டு, தீவிர திருத்தத்தின் நோக்கம், 100 சதவீதம் முழுமை அடையும். பூத்சிலிப் வினியோகிப்பதுபோலவே, இப்போதும், தங்கள் பாகத்துக்கு உட்பட்ட வாக்காளர் வசிக்கும் பகுதிகளில், கோவில், பொது இடங்கள், கடைகளில் பி.எல்.ஓ.க்கள் அமர்ந்து கொண்டு, படிவங்களை வினியோகிப்பதாக புகார் எழுகிறது பூர்த்தி செய்த படிவங்களை சேகரிக்கவாவது, வீடு தேடிச் செல்ல வேண்டும். அப்போதுதான், போலிகள், இரட்டை பதிவு, இறந்த வாக்காளர் களையப்பட்டு, தீவிர திருத்தத்தின் நோக்கம், 100 சதவீதம் முழுமை அடையும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை