புதிய சாலை அதோகதி; விபத்துக்கு அடிகோலும்
அவிநாசி; அவிநாசி பேரூராட்சி, 2வது வார்டு மடத்துப்பாளையம் பகுதியில் இருந்து செம்மாண்டம் பாளையம் வழியாக கருமாபாளையம் செல்லும் சாலையில், நெடுஞ்சாலை துறை சார்பில் சில மாதங்கள் முன் ரோடு அமைக்கப்பட்டது. கிராம அபிவிருத்தி சாலை திட்டத்தின் கீழ் 2.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1.2 கி.மீ., துாரம் புதிய ரோடு அமைக்கப்பட்டது.சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக, வெள்ளநீர் ரோட்டின் பக்கவாட்டில் கொட்டப்பட்டு இருந்த மண்ணை அரித்து சென்றது. பல இடங்களில் தார் பெயர்ந்து மண்ணுடன் அரித்துச் சென்று பள்ளம் போல் பெரும் குழி உருவாகியுள்ளது.மடத்துப்பாளையம் பகுதியில் இருந்து செம்மாண்டம்பாளையம் வரை தெருவிளக்குகள் ரோட்டில் இல்லாததால் இருள் சூழ்ந்த பகுதியாகவே எப்போதும் உள்ளது.இரவு நேரங்களில் வேலைக்குச் சென்று வீட்டிற்கு திரும்புபவர்கள் எதிர்பாராத விதமாக ரோட்டோரம் உள்ள கருமாபாளையம் குட்டை நீர்வழித்தடத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்தால், வெள்ள நீரில் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது.புதிய தார் ரோடு பெயர்ந்து வெள்ள நீருடன் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், தரமற்ற முறையில் ரோடு அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரோட்டோரம், பக்கவாட்டு சுவர் எழுப்பி மண்ணைக் கொட்டி தார் ரோட்டை பலப்படுத்த வேண்டும்.