உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிய ஜவுளிக் கொள்கை வெளியிட எதிர்பார்ப்பு

புதிய ஜவுளிக் கொள்கை வெளியிட எதிர்பார்ப்பு

பல்லடம்; ஆந்திர மாநில அரசு வெளியிட்டதைப் போன்றே தமிழக அரசு புதிய ஜவுளிக்கொள்கையை வெளியிட வேண்டும் என்று நாடா இல்லா தறி நெசவாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மாநில அரசுகளின் சலுகைகள், மானியங்கள் உள்ளிட்டவை, ஜவுளி தொழில் துறை வளர்ச்சிக்கு பிரதானமாக உள்ளன. இவ்வகையில், ஆந்திர மாநில அரசு, 2024--25ம் ஆண்டுக்கான புதிய ஜவுளி கொள்கையை வெளியிட்டுள்ளது. இதேபோல், தமிழக அரசின் புதிய ஜவுளிக் கொள்கை குறித்து, தொழில் துறையினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் கூறியதாவது: மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், மின் கட்டணம் யூனிட்டுக்கு, 6 ரூபாயாகவும், தமிழகத்தில், 9 ரூபாயாகவும் உள்ளது. இந்த விலை வித்தியாசம் நேரடியாக அடக்க விலையில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.அண்டை மாநிலங்களில் விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் மானியங்களை போன்றே தமிழக அரசும் வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கினால்தான் அம்மாநிலங்களுடன் போட்டி போட்டு தொழில் செய்ய முடியும். புதிதாக தொழில் துவங்குவதற்கும், ஏற்கனவே தொழில் செய்து வருபவர்கள் விரிவாக்கம் செய்வதற்கும், பல்வேறு சலுகைகளுடன் புதிய ஜவுளி கொள்கையை ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ளது.மஹாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ஒடிசா மாநிலங்கள், தொழில் முனைவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி உற்பத்தியை அதிகப்படுத்தி வருகின்றன. இச்சூழலில், ஆந்திர அரசும் புதிய ஜவுளி கொள்கையை அறிவித்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளது.இதேபோல், தமிழக அரசும், ஜவுளி தொழில்துறையை பாதுகாக்கவும், தொழிலை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும், புதிய ஜவுளி கொள்கையை வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் மூலம், உள்நாட்டு உற்பத்தி மட்டுமன்றி, ஏற்றுமதியிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை