குன்னத்துார் உடன் வேண்டாம் திருப்பூருடன் இணைக்கலாம்! மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் மனு
திருப்பூர்; 'குன்னத்துார் உபகோட்டத்துடன் இணைக்கப்பட்ட பகுதிகளை, மீண்டும் திருப்பூர் மாநகராட்சி பகுதி அலுவலகத்துடன் இணைக்க வேண்டும்' என, மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டத்தில், கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. ஊத்துக்குளி கோட்ட அளவிலான, மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி தலைமை வகித்தார். செயற்பொறியாளர் விஜயேஸ்வரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி பகுதி மின்பிரிவு அலுவலகங்களை, குன்னத்துார் உபகோட்டத்தில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன் கொடுத்த மனு: மீட்டர் இடமாற்றம், பெயர் மாற்றம், புதிய இணைப்பு என, பல்வேறு சேவையில் நடக்கும் பிரச்னைகள் குறித்து புகார் அளித்தும் பதில் இல்லை. அண்ணா நகர் பகுதியில் முறைகேடாக நடந்த பணி குறித்த புகார் அளித்த போது, பெயர் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது; உரிய நடவடிக்கைஇல்லை. அவிநாசி கோட்டத்தில் இருந்து வந்த பிரிவு அலுவலகங்கள், குன்னத்துார் உபகோட்டத்துடன், தொலைதுாரத்தில் உள்ள அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. குன்னத்துார் உபகோட்டத்துடன் இணைக்கப்பட்ட பணிகளை மறு ஆய்வு செய்து, வருவாய் இழப்பை சரிசெய்ய வேண்டும். போக்குவரத்து வசதியில்லாத, தொலைதுாரத்தில் உள்ள குன்னத்துார் உபகோட்டத்தில் இணைக்கப்பட்ட மின்வாரிய அலுவலகங்களை, திருப்பூர் மாநகராட்சி எல்லையில் உள்ள உபகோட்டங்களுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.