அதிகாரிகள் - ஒப்பந்ததாரர் ஒருங்கிணைப்பு இல்லை; பணிகள் முடங்கியதற்கு காரணம் என மண்டல கூட்டத்தில் குற்றச்சாட்டு
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி, 4வது மண்டலகுழு கூட்டம், முருகம்பாளையம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம்:அன்பகம் திருப்பதி (அ.தி.மு.க.,): சிவசக்தி நகர் பகுதியில் கடந்த, 2 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் குழாய், ரோடு, தெரு விளக்கு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் தவிக்கின்றனர்.செல்லம் நகர், அய்யன் நகர், கே.வி.ஆர்., நகர் பகுதியில், கடந்த இரு வாரமாக குடிநீர் இன்றி தவிக்கும் நிலை உள்ளது. திடக்கழிவு மேலாண்மையை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பயன்படுத்த தவறிவிட்டது. மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே உரிய ஒருங்கிணைப்பு இல்லாததால் வளர்ச்சி பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.சாந்தாமணி (ம.தி.மு.க.,): மங்கலம் ரோட்டில் பல இடங்களில் ரோடு பணி, குழாய் பதிப்பு பணி நடக்கிறது. பணிகள் மந்தமாக நடப்பதால், அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதோடு எந்த வழியாக செல்ல வேண் டும் ஏன தவிக்கின்றனர்.சிறு பாலம் மற்றும் குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். குடிநீர் இணைப்பு பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் ரோடு பணி தாமதமாகிறது. கருவம்பாளையம் பகுதியில் உரிய சாக்கடை கால்வாய் வசதியில்லை.சாந்தி (தி.மு.க.,): முல்லை நகர் மற்றும் சுற்றுப் பகுதியில் தார் ரோடுக்கு பூஜை போட்டும் இதுவரை பணி துவங்கவில்லை. சின்னியகவுண்டன்புதுார் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை புதர் மண்டிக் கிடக்கிறது. சரி செய்ய வேண்டும். சாக்கடை கால்வாய் முழுவதும் கழிவுகள் தேங்கி கிடக்கிறது.மணிமேகலை (மா.கம்யூ.,): நான்காவது குடிநீர் திட்டத்தில் தினமும் மேட்டுப்பாளையம் குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது ஏழு நாளுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருகிறது. தெருவிளக்கு பிரச்சனை தீர்ந்தபாடில்லை. நொச்சிபாளையம் பிரிவில், வடிகால் இல்லாமல் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இயங்காத பேட்டரி வாகனம்
ஆனந்தி (அ.தி.மு.க.,): குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் சரிவர இயங்குவதில்லை. இதனால், குப்பைகளை அகற்றாமல் தேங்கி கிடக்கிறது. பேட்டரி வாகனங்களை அதிகப்படுத்த வேண்டும். தாராபுரம் ரோட்டில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. வேகத்தடை அமைக்க வேண்டும்.மண்டல குழு தலைவர் பத்மநாபன்: அனைத்து பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் ஆய்வு செய்து உரிய முறையில் அகற்றப்படும். குடிநீர் பிரச்னை, தார் ரோடு, தெரு விளக்கு, சாக்கடை கால்வாய், திடக்கழிவு மேலாண்மை போன்ற பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் மற்றும் ஒப்பந் ததாரர்கள் இடையே உரிய ஒருங்கிணைப்பு ஏற்பட வேண்டும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.வெளிநடப்பு செய்த கவுன்சிலர்சேகர் (அ.தி.மு.க.,): தெருவிளக்கு மற்றும் மின் கம்பங்கள் பல இடங்களில் பழுதாகி உள்ளது. மழைக்காலம் என்பதால் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். காலேஜ் ரோட்டில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன். (இவ்வாறு கூறி விட்டு அவர் வெளிநடப்பு செய்தார்)