கொரோனா அட்மிட் யாருமில்லை!
திருப்பூர்: 'முன்னெச்சரிக்கையாக, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு வார்டு அமைக்கப்பட்டது; கடந்த ஒரு வாரத்தில் யாரும் அட்மிட் ஆகவில்லை' என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், 217 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறையின் அறிவுறுத்தலை பின்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா வார்டு கடந்த, 2ம் தேதி துவங்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக இரண்டு டாக்டர், ஆறு செவிலியர்கள் அடங்கிய சிகிச்சை குழு அமைக்கப்பட்டது. கூடுதலாக நோயாளிகள் அனுமதியானால், செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நல்வாய்ப்பாக தற்போது வரை யாரும் அனுமதியாகவில்லை. மாவட்டத்தில் எப்படி?
நகரின் தலைமை மருத்துவமனையாக உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மட்டுமின்றி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையான காங்கயம், தாராபுரம், பல்லடம், உடுமலை, அவிநாசி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. சூழலை பொறுத்து தேவையான தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்; நோயின் தன்மையை பொறுத்த தேவையிருப்பின், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வைக்க வேண்டும்,' என, மாவட்ட மருத்துவப் பணிகள் துறை அதிகாரிகள், கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.