உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சிக்னல் இல்லை... சிக்கல் உண்டு அவல நிலையில் அவிநாசி ரோடு

 சிக்னல் இல்லை... சிக்கல் உண்டு அவல நிலையில் அவிநாசி ரோடு

திருப்பூர், டிச. 31-அவிநாசியில் இருந்து திருப்பூர் வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் பயணிக்க, காந்தி நகர், ஸ்ரீநிவாசா தியேட்டர் (எஸ்.ஏ.பி.) ஆகிய இடங்களில் போக்குவரத்து போலீசார் 'சிக்னல் ப்ரீ' திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். வாகனங்கள் சிக்னலில் நிற்காமல் சிறிது துாரம் கடந்து சென்று 'யூ டர்ன்' எடுக்கும் வகையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆனால், வாகனங்கள் திரும்பும் இடம் உள்பட பல்வேறு இடங்களில், சாலை சேதமாகி, குழியாக உள்ளது. மையத்தடுப்பு கற்கள் அகற்றப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கான்கிரீட் சாலையில் இருந்து கற்கள் பெயர்ந்து வந்துள்ளன. ஆஷர் மில்; போலீஸ் கமிஷனர் அலுவலகம்; பங்களா ஸ்டாப் ஆகிய இடங்களின் அருகில், சாலை கடுமையாக சேதமடைந்தது. சிக்னலில் நிற்காமல் ' யூ டர்ன் ' எடுக்க வேகமாக வரும் வாகனங்கள், எளிதில் சாலையை கடக்க முடியாமல் தடுமாறுகின்றன.வழக்கமாக 'யூ டர்ன்'-ல் கனரக வாகனங்கள் தான் திரும்ப தாமதமாகும்; சாலை சேதத்தால், இலகு ரக வாகனங்கள், டூவீலர் கூட திரும்புவதில் தடுமாற்றம் ஏற்படுகிறது. 'யூ டர்ன்' எடுக்கும் இடத்துக்கு முன் வாகனங்கள் வளைவில் திரும்பும் இடத்திலும் சாலை சேதமாகியுள்ளது. போலீசார் 'சிக்னல் ப்ரீ' செய்தும், வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையை விரைவாக சீரமைத்து, வாகனங்கள் 'யூ டர்ன்'-ஐ எளிதில் கடந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள இடத்தில் போலீசார் கண்காணிப்பு இல்லாததால், விதிமுறை மீறி முன்னேறும் வாகனங்கள் அதிகமாகி விட்டது. இதையும் போலீசார் கண்காணிக்க வேண்டும். ---- திருப்பூர் - அவிநாசி சாலை பல இடங்களில் பல்லாங்குழிகளாக காட்சியளிக்கின்றன. ஆஷர் மில்; எஸ்.ஏ.பி.; காந்தி நகர் ஸ்டாப்கள் அருகில்தான் இந்தக் 'கோலம்' ஏன் தாமதம்? தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், அவிநாசியில் இருந்து அவிநாசிபாளையம் வரை, 31.8 கி.மீ. நீளத்துக்கு சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி, அவிநாசியில் இருந்து மாநகராட்சி எல்லையான அம்மாபாளையம் - தண்ணீர்பந்தல் வரை ஒரு புறமுள்ள சாலையில் முடிந்துள்ளது.தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:தற்போது கோவில் வழி பகுதியில் தார் போடும் பணி நடந்து வருகிறது. அங்கு பணி முடித்த பின், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் பணி தொடரும். இதற்கிடையில் மாநகராட்சி எல்லையின் பல இடங்களில் மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனை சரி செய்தால் தான் தார் போடும் பணியை தொடர முடியும் என்ற நிலையில், அத்தகைய பணிகளை செய்து முடிக்குமாறு, மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணி செய்து முடித்த பின், பணி தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ