பெயரளவுக்கு பள்ளிகளில் மேலாண்மைக்குழு
திருப்பூர்: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இயங்கி வரும் மேலாண்மை குழுக்கள், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த, 2024ம் ஆண்டு, திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், புதிய உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கிய புதிய மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பெயரளவில் மட்டுமே கூட்டம் நடத்தி, அந்த விபரம் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிராமப்புற அரசு பள்ளிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்துள்ளதால், கூட்டம் நடத்தி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளி மேலாண்மை குழு உருவாக்கி, அதன் பணிகள், அதிகாரம் வரையறுக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. தற்போது கிராமப்புற பள்ளிகளில் உள்ளாட்சி பிரநிதிகள் கிடையாது. நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசு பள்ளிகளை பொறுத்தமட்டில், அதிகாரத்தில் உள்ள முக்கிய உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் மட்டுமே மேம்பாட்டு பணி மேற்கொள்ள முடிகிறது. கடந்த காலங்களில், மாதந்தோறும் மேலாண்மை குழுவின் கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது, பள்ளிக் கல்வித்துறை அறிவிக்கும் தேதிகளில் மட்டுமே பெயரளவில் கூட்டம் நடத்தப்படுகிறது.