உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ்

மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ்

உடுமலை; உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், அதிகளவு ஆக்கிரமிப்புகள் உள்ளது. குறிப்பாக நகரில், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து சிவசக்திகாலனி வரை ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சென்டர்மீடியன் அமைத்த பிறகு, பிரச்னைகள் மேலும் அதிகரித்துள்ளது. ரோட்டோரத்தில், பெயர் பலகை வைப்பதுடன், பயன்பாடில்லாத பொருட்களை குவித்து வைப்பதால், வாகன ஓட்டுநர்களும், பாதசாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தற்காலிக, நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர்ந்து புகார் மனுக்கள் அனுப்பப்பட்டது. நீண்ட இழுபறிக்குப்பிறகு, தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், நகரப்பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்ற மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தினர் தீர்மானித்துள்ளனர். அதன்படி வரும் 8ம் தேதி காலை, 10:00 மணி முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் வினியோகித்து வருகின்றனர். அதில், 'தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் ஒரு கி.மீ., க்கு, தற்காலிக ஆக்கிரமிப்பு மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்கள் வரும் 8ம் தேதி அகற்றப்படும். அதற்குள், தாங்களாகவே முன்வந்து தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்படும் செலவினங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி