ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
உடுமலை; குமரலிங்கம் ரோட்டிலுள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், உடுமலை-குமரலிங்கம் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ் பராமரிக்கப்படுகிறது.இந்த ரோட்டில் குமரலிங்கம் பகுதியில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில், தற்காலிக ஆக்கிரமிப்புகள் காரணமாக, நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, வரும் 20ம் தேதி தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் குமரலிங்கம் பகுதியில், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.அதில், உடுமலை-குமரலிங்கம் ரோட்டில், 14வது கி.மீ., ல் இருந்து, 18 வது கி.மீ., வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகள், வரும், 20ல் அகற்றப்பட உள்ளது.அப்பகுதியில், தற்காலிக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும். தவறினால், தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதற்கான செலவினங்கள் சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.இது குறித்த ஆட்சேபங்கள் இருந்தால், மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் நேரில் தெரிவிக்கலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.