உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குளத்தை எட்டிப்பார்க்காத நொய்யல் தண்ணீர்; வாய்க்கால் துார்வார களமிறங்கிய விவசாயிகள்

குளத்தை எட்டிப்பார்க்காத நொய்யல் தண்ணீர்; வாய்க்கால் துார்வார களமிறங்கிய விவசாயிகள்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி அடுத்துள்ள முதலிபாளையம் ஊராட்சி பகுதியில், நிலத்தடி நீர் செறிவூட்டலில் முக்கிய ஆதாரமாக இருப்பது, மாணிக்காபுரம் குளம்.குளம் நிரம்பிய நிலையில் இருக்கும் போது, மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து, சுற்றுப்பகுதியில் விவசாயம் செய்யும் வசதியுடன் குளம் அமைந்துள்ளது. நீண்டகாலமாக வறண்டு கிடந்த குளத்தை துார்வாரி சுத்தம் செய்து, மறைந்து போன வாய்க்காலுக்கு மீண்டும் உயிரூட்டி மாணிக்காபுரம் விவசாயிகள் குளத்துக்கு தண்ணீர் கொண்டு சென்றனர். சாயக்கழிவுநீர் பிரச்னையால், காசிபாளையம் தடுப்பணை தகர்க்கப்பட்டிருந்தது.கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், காசிபாளையம் நொய்யல் தடுப்பணையை சீரமைத்து, வாய்க்கால் தடத்தை கண்டறிந்து, வாய்க்கால் வெட்டி, குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. விவசாயிகள் கூட்டாக இணைந்து, குளத்துக்கு தண்ணீர் கொண்டு சென்று, நிலத்தடி நீரை பாதுகாத்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக, நொய்யலில் மழை வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. மழைபெய்து, சுத்தமாக வரும் தண்ணீரை குளம், குட்டைகளை தேக்கி வைக்க, வழியோர விவசாய அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடியும், குளத்துக்கு தண்ணீர் வராததால், மாணிக்காபுரம் விவசாயிகள் கவலை அடைந்தனர். மீண்டும், தங்களது சொந்த செலவில், வாய்க்காலை துார்வாரி தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிட்டனர். அதன்படி, நேற்று முதல், காசிபாளையம் அணைக்கட்டு துவங்கி, குளம் வரையில், வாய்க்கால் சீரமைப்பு பணி துவங்கப்பட்டுள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'மாணிக்காபுரம் குளத்துக்கு வரும் வாய்க்கால் அடிக்கடி புதர்மண்டி விடுகிறது. அணைக்கட்டின் அருகே, ஆகாயத்தாமரை மூடிவிடுகிறது. பொன்னாபுரம் பகுதியில், சாக்கடை கழிவு ராஜவாய்க்காலில் கலந்து, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அங்குதான், தண்ணீர் செல்வது அதிகம் தடைபடுகிறது.குப்பையும், கழிவுநீரும் கலப்பதை தடுக்க வேண்டும். குளத்துக்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக, பொக்லைன் மூலமாக, வாய்க்காலை துார்வாரி வருகிறோம். அடுத்தடுத்து வரும் மழைநீரால், குளத்தை நிரப்பி விடுவோம். யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க முடியாது என்பதால், விவசாயிகள் இணைந்து, இப்பணிகளை செய்து விடுகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை